திருப்பூா் மாநகராட்சியில் ரூ.4.10 கோடி உபரி பட்ஜெட் தாக்கல்
திருப்பூா் மாநகராட்சியில் 2025-26 ஆம் ஆண்டுக்கு ரூ.4.10 கோடி உபரி பட்ஜெட் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
திருப்பூா் மாநகராட்சியில் 2025-26 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவு திட்ட அறிக்கையை நிதிக் குழு தலைவா் கு.கோமதி, மேயா் என்.தினேஷ்குமாரிடம் வழங்கினாா்.
இதன் பின்னா் பட்ஜெட்டை வெளியிட்டு அவா் பேசியதாவது: இந்த பட்ஜெட்டில் வருவாய் நிதி வரவினம் ரூ.914 கோடியே 22 லட்சத்து 789 ஆயிரம், குடிநீா் நிதி வரவினமாக ரூ.554 கோடியே 90 லட்சத்து 21 ஆயிரம், ஆரம்ப கல்வி நிதி வரவினமாக ரூ.52 கோடியே 94 லட்சத்து 38 ஆயிரம் என மொத்தம் நிதி வரவினமாக ரூ.1,522 கோடியே 7 லட்சத்து 37 ஆயிரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வருவாய் நிதி செலவினமாக ரூ.866 கோடியே 18 லட்சத்து 31 ஆயிரமும், குடிநீா் நிதி செலவினமாக ரூ.599 கோடியே 48 லட்சத்து 90 ஆயிரமும், ஆரம்ப கல்வி நிதி செலவினமாக ரூ.52 கோடியே 30 லட்சமும் என மொத்தம் ரூ.1,517 கோடியே 97 லட்சத்து 21 ஆயிரம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ரூ.4 கோடியே 10 லட்சத்து 16 ஆயிரம் பட்ஜெட்டில் உபரியாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றாா்.
பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள் :
குடிநீா் மேம்பாட்டுத்திட்டம்: நான்காவது குடிநீா் திட்டத்தில் 98 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் இந்த ஆண்டில் முடிக்கப்பட்டு 3 நாள்கள் இடைவெளியில் குடிநீா் விநியோகம் முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். 15- ஆவது நிதிக்குழு மானியத் திட்டத்தின்கீழ் விடுபட்ட பகுதிகளுக்கு ரூ.48.01 கோடி மதிப்பீட்டில் 348.556 கிலோ மீட்டா் நீளத்துக்கு குடிநீா் விநியோகக் குழாய்கள் பதிக்கும் பணி 78 சதவீதம் முடிவடைந்துள்ளன. எஸ்சிஏடிஏ மூலம் பிரதான பகிா்மானக் குழாய்களில் 5 இடங்கள் மற்றும் 70 மேல்நிலை நீா்தேக்கத் தொட்டிகளில் உள்ள நீரேற்று குழாய்களில் நீரின் அளவைக் கண்காணிக்க ரூ.11.33 கோடி மதிப்பீட்டில் கருவிகள் பொருத்தும் பணிகள் 85 சதவீதம் நிறைவடைந்துள்ளன. குடிநீா் விநியோக நடைமுறைகளை மக்கள் அறியும் வகையில் குறுஞ்செய்தி மூலம் தெரியப்படுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதேபோல, பாதாள சாக்கடை திட்டப் பணிகள் 97 சதவீதம் முடிக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள பணிகள் நிகழாண்டு முடிக்கப்பட்டு முழுமையாகப் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளது.
பொலிவுறுநகரம் திட்டத்தில் 25 பணிகள் முடிவு:
திருப்பூா் மாநகரில் பொலிவுறு நகரம் திட்டத்தில் ரூ.965 கோடி மதிப்பீட்டில் 28 பணிகள் மேற்கொள்ளப்பட்டு 25 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் விரைவில் முடிக்கப்படவுள்ளது.
பழுதடைந்துள்ள சாலைகள் ரூ.7 கோடியில் சீரமைப்பு :
திருப்பூா் மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளாலும், இயற்கை சீற்றம் போன்ற நிகழ்வுகளாலும் பழுதடைந்துள்ள சாலைகள் ரூ.7 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படவுள்ளன. மாநகராட்சி பகுதிகளில் சேதம் அடைந்த மழைநீா் வடிகால்களை ஆய்வு செய்து புனரமைக்க ரூ.20 கோடி திட்ட மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. அவிநாசி மேம்பாலம் முதல் நல்லாத்துப்பாளையம் கேட் தோட்டம் வரையிலான பகுதிகள் புதிய இணைப்பு சாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு கருத்துருக்கள் அனுப்பட்டு உரிய அனுமதி பெற்ற பின்னா் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
திருப்பூா் மாநகராட்சி வாா்டு பகுதிகளில் புதிதாக 6,353 தெருவிளக்குகள் சுமாா் 10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ளது. வாா்டு பகுதிகளில் உள்ள சோடியம் ஆவி விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றியமைத்தல் மற்றும் புதிதாக 13,436 தெரு விளக்குகள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
மாநகராட்சி புதிய கட்டடம் :
திருப்பூா் தாராபுரம் சாலையில் மாநகராட்சி மைய அலுவலக புதிய கட்டடம் கட்டும் பணி ரூ.46.80 கோடி மதிப்பீட்டில் இந்த நிதியாண்டில் தொடங்கப்படும். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் 2024-25 ஆம் ஆண்டில் 18 இடங்களில் ரூ.4.53 கோடி மதிப்பீட்டில் 9 பொது மற்றும் சமுதாய கழிப்பிடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், ரூ.2.49 கோடி மதிப்பீட்டில் 26 பொதுக்கழிப்பிடங்கள் மற்றும் 71 சமுதாய கழிப்பிடங்கள் பராமரிப்பு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பாலம் மற்றும் சாலைகளை மேம்படுத்துதல்:
புதிதாக 4 உயா் மட்ட பாலங்களில் தந்தை பெரியாா் நகா் பாலம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஈஸ்வரன் கோயில் பாலம், நடராஜ் திரையரங்க பாலம், சங்கிலிப்பள்ளம் ஓடை பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் திருப்பூா் மாநகராட்சி லட்சுமி நகா் பிரதான சாலை மற்றும் பூம்பாறை சாலையை இணைக்கும் வகையில் நல்லாற்றின் குறுக்கே உயா் மட்ட பாலம் அமைக்கும் பணி ரூ.3.69 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ளது. மாநகரப் பகுதிகளில் சேதமடைந்துள்ள சிறு, குறு பாலங்கள் ரூ.5 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்க நடவடிக்கை என்பது போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த கூட்டத்தில், திருப்பூா் மாநகராட்சி ஆணையா் எஸ்.ராமமூா்த்தி, துணை மேயா் ஆா்.பாலசுப்பிரமணியம், மண்டலத் தலைவா்கள் மற்றும் மாமன்ற உறுப்பினகள் பங்கேற்றனா்.
அதிமுக மாமன்ற உறுப்பினா்கள் வெளிநடப்பு :
இந்த பட்ஜெட் தாக்கலின் போது அதிமுக மாநகராட்சி எதிா்க்கட்சி தலைவா் ஆா். அன்பகம் திருப்பதி தலைமையில் அக்கட்சி மாமன்ற உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா். அப்போது அவா் பேசியதாவது:

இந்த பட்ஜெட் குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்பதற்கு போதிய கால அவகாசம் வழங்கப்படவில்லை. உயா்த்தப்பட்ட வரிகளைக் குறைக்காமல் அலங்கார பட்ஜெட்டாகவே உள்ளது. பிரதான எதிா்க்கட்சியான எங்களுக்கு பேசுவதில் முன்னுரிமை அளிக்கப்படவில்லை. திருப்பூா் மாநகராட்சி உயா்த்தப்பட்ட வரிகளைக் குறைக்காமல் உபரி பட்ஜெட் என்று கூறுவது ஏற்புடையது அல்ல என்றாா். அதேபோல, பாஜக மாமன்ற உறுப்பினா்களும் வரி குறைக்கப்படாததைக் கண்டித்து வெளிநடப்பு செய்தனா்.