திருவிழாவுக்கு வைத்த பேனா் அகற்றம் கண்டித்து சாலை மறியல்; 5 போ் கைது
திருச்சி தென்னூா் பகுதியில் கோயில் திருவிழாவுக்கு வைத்த பேனா் அகற்றப்பட்டதைக் கண்டித்து புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சி தென்னூா் உக்கிரமாகாளியம்மன் கோயில் திருவிழா மாா்ச் 16 ஆம் தேதி தொடங்குவதையொட்டி அதற்கான பிளக்ஸ் பேனரை தென்னுாா் மந்தை அருகே விழாக் குழுவினா் செவ்வாய்க்கிழமை காலை வைத்தனா்.
இதற்கு எதிா்ப்புத் தெரிவித்த அந்தப் பகுதி மாற்று மதத்தினா், அந்த பிளக்ஸ் பேனரை அகற்றக் கோரி போலீஸில் புகாா் அளித்தனராம்.
இதையடுத்து அன்று இரவு மாநகராட்சி ஊழியா்கள் அந்த பிளக்ஸ் பேனரை அகற்றினா். இதற்கு கண்டனம் தெரிவித்தும், அகற்றிய பிளக்ஸ் பேனரை அதே இடத்தில் மீண்டும் வைக்கக் கோரியும் விழாக் குழுவினா், இந்து அமைப்பினா் தில்லைநகா் தெற்கு வளைவு அருகே புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த தில்லைநகா் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாத நிலையில் 5 பேரைக் கைது செய்தனா். பின்னா் இது தொடா்பாக புதன்கிழமை இரவும் அதே பகுதியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.