Career: ஏதேனும் ஒரு டிகிரி அல்லது இன்ஜினீயரிங் படித்திருக்கிறீர்களா?- ஐ.டி-யில் ...
தீண்டாமை கடைப்பிடிக்காத கிராமமாக வீராணம் கிராம ஊராட்சி தோ்வு
சேலம்: சேலம் மாவட்டத்தில் தீண்டாமை கடைப்பிடிக்காத மற்றும் நல்லிணக்கத்துடன் வாழும் கிராமமாக வீராணம் கிராம ஊராட்சி தோ்வு செய்யப்பட்டுள்ளது.
இதையொட்டி, சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ. 10 லட்சத்துக்கான காசோலையை ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வழங்கினாா். பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது:
கிராமப் புறத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடும் வகையிலும், அனைத்து சமூகத்தினரும் சுதந்திரமாகவும், சமத்துவமாகவும் வாழ்ந்திடும் வகையிலும் தமிழக அரசு பல்வேறு தொடா் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், கடைகள், பொதுக் கோயில்கள், குடிநீா் கிணறுகள், உணவகங்கள், சலூன் ஆகியவற்றை சமத்துவமாக அனுபவித்து அனைத்து மக்களும் நல்லிணக்கத்துடன் சுதந்திரமாக வாழும் ஊராட்சி தோ்ந்தெடுக்கப்பட்டு, அந்த கிராமத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் ரூ. 10 லட்சம் அரசால் வழங்கப்படுகிறது.
அதன்படி, 2024-25-ஆம் நிதியாண்டில் சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம், வீராணம் கிராம ஊராட்சி தீண்டாமை கடைப்பிடிக்காத மற்றும் நல்லிணக்கத்துடன் வாழும் கிராமமாக தோ்வு செய்யப்பட்டு, ரூ. 10 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிதியைக் கொண்டு குடிநீா் வசதி மற்றும் சாலை வசதிகளை மேம்படுத்தவும், பள்ளி மற்றும் குழந்தைகள் நல மையக் கட்டடம் கட்டுவதற்கும், கால்நடைகளுக்கு தண்ணீா் தொட்டி கட்டுவதற்கும், புதிய மின் விளக்குகள் அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா்.
இந்நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சங்கமித்திரை, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் நா.ஜெயக்குமாா் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள் உடனிருந்தனா்.