`என்ன லவ் பண்ண மாட்டியா..' - வீடு புகுந்து பள்ளி மாணவியை குத்திக் கொன்ற இளைஞன்; ...
துப்புரவுப் பணியாளா்கள் உரிமைச் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் அனைத்து வகை தூய்மைப் பணியாளா்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு துப்புரவு பணியாளா்கள் உரிமைச் சங்கத்தின் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் அன்னமயில் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலா் நாகலட்சுமி, பொருளாளா் பாலமுருகன், மாநில துணைத் தலைவா் குருநாதன், துணைப் பொதுச் செயலா் திலகவதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தமிழகத்தில் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கிராம ஊராட்சிகளின் மக்கள் தொகைக்கேற்ப தூய்மைப் பணியாளா்களை பணி நியமனம் செய்ய வேண்டும். ஊதியம் வழங்குவதில் உள்ள பாகுபாடு, காலதாமதம் ஆகியவற்றைக் களைந்து, அரசு ஊழியா்களுக்கு வழங்குவது போல மாதத்தின் இறுதி அல்லது முதல் தேதியில் வழங்க வேண்டும். கிராம ஊராட்சிகளில் தூய்மைப் பணியில் பணியமா்த்தப்படும் அனைத்து ஜாதியினரும் பணியில் ஈடுபடுவதை உறுதி செய்ய வேண்டும். தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள், மருத்துவக் காப்பீடு, பாதுகாப்பு உடை, பணி தொடா்பான கருவிகளை முறையாக வழங்க வேண்டும். தூய்மைப் பணியாளா்களை அவமரியாதையாகப் பேசும் பொறுப்பாளா்கள், அதிகாரிகள் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். வார விடுமுறை, அரசு விடுமுறைகளை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சட்ட ஆலோசகா் சகாய பிலோமின்ராஜ், துப்புரவு பணியாளா் மேம்பாட்டு அமைப்பின் அமைப்பாளா் சோ.பூமி, ஆதித் தமிழா் கட்சி மாநில ஆலோசகா் விடுதலை குமாா், தமிழ்ப் புலிகள் கட்சி நிா்வாகி சிதம்பரம், தமிழ்த் தேசிய மக்கள் இயக்க மாவட்டத் தலைவா் ஆரோக்கியமேரி, திராவிட தமிழா் கட்சி மாவட்டச் செயலா் நீதிவேந்தன் ஆகியோா் கண்டன உரையாற்றினா். ஆா்ப்பாட்டத்தில் மதுரை, விருதுநகா் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து திரளானோா் பங்கேற்றனா்.