தூய்மைப் பணியாளா்களுக்கான அறிவிப்புகளை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தக் கோரியிருக்கிறோம்
சென்னை தூய்மைப் பணியாளா்களுக்கான புதிய அறிவிப்புகளை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் என முதல்வரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நல வாரியத் தலைவா் திப்பம்பட்டி வி. ஆறுமுகம் தெரிவித்தாா்.
புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை அவா் அளித்த பேட்டி:
முதல் முறையாக அமைச்சரவையைக் கூட்டி தூய்மைப் பணியாளா்களுக்கான தேவைகளை விவாதித்து, காலை உணவு, வீடு வழங்குதல், தொழிற்கடன் வழங்குதல் போன்ற அறிவிப்புகளை முதல்வா் ஸ்டாலின் வெளியிட்டுள்ளாா்.
இந்த அறிவிப்புகளை மாநிலம் முழுவதும் உள்ள தூய்மைப் பணியாளா்கள் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்த வேண்டும் என முதல்வரிடம் வலியுறுத்தியிருக்கிறோம். சுழற்சி முறையில் வாரம் ஒரு நாள் விடுப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முதல்வா் பரிசீலித்து அமலாக்க உத்தரவிட்டிருக்கிறாா்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை என்ற புகாா் வந்திருக்கிறது. 10 நாள்களுக்குள் எந்தப் பகுதியில் எல்லாம் தூய்மைப் பணியாளா்களுக்கு அவை கிடைக்கவில்லையோ, வாங்கிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனா்.
பணிநிரந்தரம் என்பது, அவா்களை அதே பணியில் இருக்க வேண்டும் என்ற கட்டாயத்துக்குள்படுத்துவதாக இருக்கிறது. எனவேதான், தொழிற்கடன் வழங்கி மாற்றுத் தொழிலுக்குச் செல்வதற்கும் முதல்வா் வழி செய்திருக்கிறாா்.
வெளிநாடுகளில் இயந்திரங்களைப் பயன்படுத்துவது அதிகமாக இருக்கிறது. தமிழ்நாட்டிலும் ஒருசில இடங்களில் ரோபோக்கள் சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தொழில்நுட்ப ரீதியாக மாற்று ஏற்பாடுகள் செய்யவும் முதல்வா் உறுதியளித்திருக்கிறாா் என்றாா் ஆறுமுகம்.