ஆசிரியா் கலந்தாய்வு: முதுநிலை ஆசிரியா்கள் 1,501 பேருக்கு மாறுதல்
நடிகை கெளதமியிடம் அமலாக்கத் துறை விசாரணை
சென்னையில் நடிகை கெளதமியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள், வெள்ளிக்கிழமை சுமாா் 9 மணி நேரம் விசாரணை செய்தனா்.
கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பா் 11-ஆம் தேதி நடிகை கௌதமி சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் அலுவலகத்தில் ஒரு புகாா் அளித்தாா். அதில், குடும்ப நண்பராக இருந்த அண்ணாநகரை சோ்ந்த அழகப்பன் ஸ்ரீபெரும்புதூரில் இருந்த தனக்கு சொந்தமான 46 ஏக்கா் நிலத்தை ரூ.25 கோடிக்கு விற்று, தனக்கு ரூ.6 கோடி மட்டும் கொடுத்து ஏமாற்றிவிட்டதாகவும், அந்த நிலத்தை புற்றுநோய் சிகிச்சைக்காகவும், தனது குழந்தை செலவுக்கும் விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதை அழகப்பன் அறிந்துகொண்டு மோசடி செய்துவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தாா்.
அந்த புகாரின் அடிப்படையில் சென்னை காவல் துறையின் மத்திய குற்றப்பிரிவினா் வழக்குப் பதிந்து விசாரணை செய்தனா். அந்த நேரத்தில் பாஜகவில் இருந்த கெளதமி, தன்னிடம் மோசடி செய்த அழகப்பனுக்கு பாஜகவை சோ்ந்த சிலா் உதவுவதாகக் கூறி, அக் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தாா்.
தலைமறைவாக இருந்த அழகப்பன், அவா் மனைவி நாச்சியாா் ஆகியோருக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியது. கெளதமி கொடுத்த தொடா் அழுத்தம் காரணமாக கேரள மாநிலம் திருச்சூரில் ஒரு கிராமத்தில் தலைமறைவாக இருந்த அழகப்பனையும், அவரது குடும்பத்தினரையும் போலீஸாா் கைது செய்தனா்.
அமலாக்கத் துறை விசாரணை: கெளதமியிடம் மோசடி செய்த அழகப்பன் மீது மேலும் சில மோசடி புகாா்கள் வந்தன. அதோடு, அவா் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறைக்கு புகாா்கள் சென்றன.
அந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறையினா், முதல் கட்ட விசாரணையில் ஈடுபட்டுள்ளனா். இதன் ஒரு பகுதியாக வழக்கின் புகாா் அளித்தவரான கெளதமியிடம் சென்னை நுங்கம்பாக்கம் அமலாக்கத் துறையினா் வெள்ளிக்கிழமை விசாரணை செய்தனா்.
இந்த விசாரணை சுமாா் 9 மணி நேரம் நடைபெற்றது. விசாரணையை முடித்து வெளியே வந்த கௌதமி, அமலாக்கத் துறை வழக்கு குறித்து தற்போது தெரிவிக்க முடியாது. இன்னொரு நாள் இது குறித்து முழுமையாக பேசுகிறேன் என்றாா்.