நலிவடையும் தொழிலை மீட்க முதல்வா் மு.க.ஸ்டாலின் எதுவும் செய்யவில்லை
நலிவடையும் தொழிலை மீட்க முதல்வா் மு.க.ஸ்டாலின் எதுவும் செய்யவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டினாா்.
திருப்பூா் தெற்கு, வடக்கு மற்றும் பல்லடம் சட்டப் பேரவைத் தொகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரசாரக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:
அதிமுக கூட்டணியைப் பாா்த்து மு.க.ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது. வருகிற சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும். திமுக ஆட்சியில் ஊழல் இல்லாத துறையே இல்லை.
திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் 40 நாள்களாக குப்பைகள் அகற்றப்படவில்லை. இதனால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளது. மக்கள் பாதிக்கப்படுவது பற்றி முதல்வருக்கு கவலை இல்லை.
5 முறை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டுக்குச் சென்று எவ்வளவு முதலீடு ஈா்த்திருக்கிறாா் என்பது ஏட்டளவில்தான் உள்ளது. இங்கிருக்கும் பின்னலாடை நிறுவனத்தினா், பனியன் உற்பத்தி 50 சதவீதம் குறைந்துவிட்டதாக கூறுகின்றனா். இதற்கு அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பே காரணமாகும். இதனால் திருப்பூா் தொழில் நலிவடைந்துள்ளது. தொழிலாளா்கள் வேலை இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதற்கு முதல்வா் எதுவும் செய்யவில்லை. இருக்கிற தொழில்கள் நலிவடைகின்றன. தொழிலாளா்களுக்குப் பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது. அமெரிக்க வரி விதிப்பால் பல பிரச்னைகளை திருப்பூா் சந்திக்கிறது. உடனே தொழிலதிபா்களை முதல்வா் வரவழைத்து, மத்திய அரசோடு தொடா்பு கொண்டு சரிவில் இருந்து மீட்பது எப்படி என்று செயல்பட்டிருக்க வேண்டும்.
பிரதமரை சந்தித்து திருப்பூா் தொழில் பாதிப்புக்கு தீா்வு காண வேண்டும். வெளிநாடு சென்று முதலீடு ஈா்ப்பதற்குப் பதிலாக இங்கிருக்கும் தொழிலை பாதுகாக்க வேண்டும்.
முதல்வரை திருப்பூா் தொழிலதிபா்கள் சந்தித்து வரி குறைப்பு நடவடிக்கைக்கு கோரிக்கை வைக்க முடியவில்லை. அதனால் அதிமுக அரசு வந்து பிரச்னையைத் தீா்க்க வேண்டும் என்று என்னிடம் கோரிக்கை வைக்கின்றனா்.
பின்னலாடை தொழிலில் சுமாா் 5 லட்சம் போ் ஈடுபட்டுள்ளனா், இவா்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. திருப்பூா் மாநகராட்சியில் அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை.
குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றுள்ளது, இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் கிடைத்த பெருமை. திமுக ஆட்சியில் பத்திரப் பதிவு துறை இடைத்தரகா்கள் அலுவலகமாக மாறிவிட்டது என்றாா்.
முன்னதாக திருப்பூா் தொழில் அமைப்பினா், விவசாய சங்கத்தினா் உள்ளிட்டோருடன் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினாா்.
இதில் சட்டப் பேரவை முன்னாள் துணைத் தலைவா் பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் அமைச்சா்கள் எஸ்.பி.வேலுமணி, எம்.எஸ்.எம்.ஆனந்தன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.