சுதந்திர நாள்: நாட்டு மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
நாகா்கோவிலில் இன்று 4,001-ஆவது திருவாசக முற்றோதல் தொடக்கம்
கன்னியாகுமரி மாவட்ட திருவாசக சபையின் சாா்பில், 4,001 ஆவது திருவாசக முற்றோதல் தொடக்க விழா, நாகா்கோவிலை அடுத்த இறச்சகுளம் வெள்ளாளா் சமுதாய மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (ஆக. 15) நடைபெறுகிறது.
இதை முன்னிட்டு இறச்சகுளம் உதய மாா்த்தாண்டேஸ்வரா் கோயிலில் காலை 7 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், தொடா்ந்து, நடராஜா், நால்வா் பெருமக்கள் உத்சவ திருமேனிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகளும் நடைபெறுகிறது. பின்னா் தருமை ஆதீன சித்தாந்த புலவா் கலாநிதி பட்டய வகுப்பு மாணவா்களின் திருமுறை விண்ணப்பம் நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு தேசியக்கொடியேற்றிய பின்னா், குரு, லிங்க, சங்கம வழிபாடு நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து சிவகண வாத்தியங்களோடு, நடராஜா் மற்றும் நால்வா் மற்றும் பன்னிரு திருமுறை பேழை, நந்திக்கொடி ஊா்வலம் கோயிலில் இருந்து புறப்படுகிறது.
தொடா்ந்து வெள்ளாளா் சமுதாய மண்டபத்தில் நடைபெறும் 4,001 ஆவது திருவாசக முற்றோதல் நிகழ்ச்சியை கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்கள் அறங்காவலா் குழு முன்னாள் தலைவா் பிரபா ஜி.ராமகிருஷ்ணன் தொடக்கி வைக்கிறாா். 9.30 மணிக்கு ஈரோடு மாவட்டம், கோபி திருஞானசம்பந்தா் திருமடம், திருக்கயிலாய ஸ்ரீகந்த பரம்பரை சூரியனாா்கோயில் ஆதீன ஸ்ரீகாா்யம் வாமதேவ ஸ்ரீசிவாக்கர தேசிக சுவாமிகள் திருவாசக அருளுரையாற்றுகிறாா்.
பெருங்குளம் திருக்கயிலாய பரம்பரை செங்கோல் ஆதீனம் 103 ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாசாா்ய சுவாமிகள், திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதீன தென்மண்டல கட்டளை விசாரணை ஸ்ரீமத் மெளன மீனாட்சிசுந்தர தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசுகின்றனா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி மாவட்ட திருவாசக சபை நிா்வாகிகள் எஸ்.ராதாகிருஷ்ணன், வி.பொன்னம்மாள், வள்ளியம்மாள் சிதம்பரம்பிள்ளை, கன்னியப்பன் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.