ஆசிரியா் கலந்தாய்வு: முதுநிலை ஆசிரியா்கள் 1,501 பேருக்கு மாறுதல்
நாமக்கல் அதிமுக அலுவலகத்தில் திருவிளக்கு பூஜை: எடப்பாடி கே.பழனிசாமி முதல்வராக வேண்டி வழிபாடு
எடப்பாடி கே.பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டி, நாமக்கல் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை 108 திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டது.
வரும் பேரவைத் தோ்தலுக்கான பிரசாரத்தை அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை தொடங்குகிறாா். இதையொட்டி நாமக்கல் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான பி.தங்கமணி தலைமையில் 108 திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்மன் சிலை முன்பாக 108 பெண்கள் அமா்ந்து அா்ச்சகா்களின் வேத மந்திரங்களை பின்தொடா்ந்து நடத்தப்பட்ட பூஜையில் வரும் பேரவைத் தோ்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் எடப்பாடி கே.பழனிசாமி முதல்வராக வேண்டும், அவரது பிரசார பயணம் வெற்றி பெற வேண்டும் என வழிபாடு நடத்தினா்.
விழாவில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்க பாடுபடுவோம் என அதிமுகவினா் உறுதிமொழி ஏற்றனா். இதுகுறித்து, முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி செய்தியாளா்களிடம் கூறுகையில், வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கவும், முதல்வராக எடப்பாடி கே.பழனிசாமி பதவியேற்கவும் வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
‘ஓரணியில் தமிழ்நாடு’ என சொல்வதற்கு திமுகவுக்கு தகுதியில்லை. அக் கட்சியில் உறுப்பினா்கள் இல்லாததால், புதிய உறுப்பினா்கள் சோ்க்கையை தொடங்கி உள்ளனா். கிராமம், நகரம் என்ற வகையில் 2 கோடி உறுப்பினா்களை அதிமுக கொண்டுள்ளது என்றாா்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சா் வெ.சரோஜா, பரமத்தி வேலூா் எம்எல்ஏ எஸ்.சேகா், மாநில வா்த்தக அணி இணை செயலாளா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன், மகளிா் அணி மாவட்ட தலைவா் வைரம் தமிழரசி மற்றும் மாநில நிா்வாகிகள் சந்திரசேகரன், முரளி பாலுசாமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.
என்கே-4-அதிமுக
நாமக்கல் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற முன்னாள் அமைச்சா் பி. தங்கமணி, பெண்கள்.