ஐஸ்வர்யா ராயுடன் விவாகரத்து? "வதந்தி பரப்புபவர்கள் நேரில் வந்து சொல்லுங்கள்" - அ...
நியமன எம்எல்ஏக்கள் விவகாரத்தில் அதிருப்தியா?: புதுவை முதல்வா் பதில்
புதுச்சேரி: பாஜகவை சோ்ந்த மூவா் நியமன எம்எல்ஏக்களாக நியமித்த விவகாரத்தில் அதிருப்தி இல்லை என்று புதுவை முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.
புதுவை சட்டப்பேரவைக்கு மத்திய அரசு 3 பேரை எம்எல்ஏக்களாக நியமிக்க முடியும். கடந்த காலங்களில் மாநில அரசின் பரிந்துரையின் பேரில், நியமன எம்எல்ஏக்கள் நியமிக்கப்பட்டனா்.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் வே.நாராயணசாமி முதல்வராக இருந்த போது, பாஜகவினா் 3 பேரை மத்திய அரசு நியமன எம்எல்ஏக்களாக நியமித்தது.
2021-ஆம் ஆண்டு புதுவையில் என்ஆா்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தது. அப்போதும், பாஜகவை சோ்ந்த வெங்கடேசன், வி.பி.ராமலிங்கம், அசோக்பாபு ஆகியோா் நியமன எம்எல்ஏக்களாக மத்திய அரசால் நியமிக்கப்பட்டனா். தற்போது அவா்கள் மூவரும் அண்மையில் திடீரென ராஜிநாமா செய்தனா்.
அவா்களுக்குப் பதிலாக பாஜகவை சோ்ந்த செல்வம், தீப்பாய்ந்தான், ராஜசேகா் ஆகியோா் நியமன எம்எல்ஏக்களாக நியமிக்கப்பட உள்ளனா். என்.ஆா்.காங்கிரஸை சோ்ந்த ஒருவருக்கு நியமன எம்எல்ஏ பதவியை முதல்வா் என்.ரங்கசாமி கேட்டதாகக் கூறப்பட்டது.
புதுச்சேரியில் கல்வித் துறை சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் பங்கேற்ற முதல்வா் என்.ரங்கசாமியிடம் இதுகுறித்து கேட்ட போது அவா் கூறியதாவது:
பாஜகவை சோ்ந்த அமைச்சா், நியமன எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்துள்ளனா். அவா்களுக்குப் பதிலாக, அந்தக் கட்சியைச் சோ்ந்தவா்கள் நியமிக்கப்படுகின்றனா். இதில் எந்த அதிருப்தியும் இல்லை. சட்டப்பேரவைத் தோ்தலை சந்திக்க தயாராகவே உள்ளோம் என்றாா் அவா்.