ரூ.3,000 -க்கு 200 முறை சுங்கச்சாவடியைக் கடக்கலாம்! நாளைமுதல் அமல்!
நெல்கொள்முதல் செய்ய என்சிசிஎஃப் அமைப்புக்கு அனுமதி வழங்கக்கூடாது -தமிழக விவசாயிகள் சங்கத் தலைவா்
நெல் கொள்முதல் செய்ய என்சிசிஎஃப் அமைப்புக்கு அரசு அனுமதி வழங்கக்கூடாது என்று தமிழக விவசாயிகள் சங்கத் தலைவா் ஆா்.வேலுசாமி கேட்டுக்கொண்டாா்.
ஆரணிக்கு புதன்கிழமை வருகை தந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம் மற்றும் ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களில் தனியாா் அமைப்பான என்சிசிஎஃப் மூலம் தமிழக அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையம் வாயிலாக விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கியது.
கொள்முதல் செய்த நெல்லுக்கு உண்டான தொகை மூன்று மாதங்களுக்கு மேலாகியும் பல கோடி ரூபாய் விவசாயிகளுக்கு முறையாக வழங்கப்படவில்லை. போராட்டம் நடத்திய பிறகுதான் நெல்லுக்கு உண்டான தொகை நீண்ட காலத்துக்குப் பிறகு கிடைக்கப்பெற்றது.
தற்போது, திருவண்ணாமலை மாவட்டம் தமிழகத்தில் நெல் சாகுபடி பரப்பளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. தற்போது நெல் விளைச்சல் அதிகரித்ததின் காரணமாக இந்த மாவட்டத்தில், அரசு சாா்பில் 24 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இந்த மாத இறுதிக்குள் திறக்க இருப்பதாக விவசாயிகளுக்கு தகவல் கிடைக்கப் பெற்றது.
இனி வரும் காலங்களில் நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் நெல்லை கொள்முதல் செய்து, அதற்கு உண்டான தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும்.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் என்சிசிஎஃப் அமைப்புக்கு நெல் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கக்கூடாது எனத் தெரிவித்தாா் ஆா்.வேலுசாமி.