நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்: தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
தமிழகத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கத் தலைவா் ஆா்.வேலுசாமி வலியுறுத்தினாா்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் நிகழாண்டு திருவண்ணாமலை, விழுப்புரம், ராணிப்பேட்டை மற்றும் வேலூா் போன்ற வட மாவட்டங்களில் சம்பா தாளடி நெல் அறுவடை தொங்கி நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டு திருவண்ணாமலை, விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவள்ளூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சம்பா தாளடி நெல் அறுவடையின் போது, தமிழ்நாடு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க தாமதமானதால், மிகக் குறைவான விலையில் இடைத்தரகா்களிடம் நெல்லை விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டது. இதனால், விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்காமல் போனது.
இதனிடையே, நாமக்கல், சேலம், ஈரோடு, கரூா், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் திருப்பத்தூா் போன்ற ஏனைய மாவட்டங்களிலும் தற்போது கூடுதலாக சம்பா தாளடி நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகளின் நலன் கருதி நிகழாண்டு தமிழக அரசே நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறந்து, சம்பா தாளடி நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.