பசுமை வகை தொழில்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கான கால அளவு 20 நாள்களாகக் குறைப்பு: அமைச்சா் தகவல்
பசுமை வகை தொழில்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கான கால அளவை 120 நாள்களிலிருந்து 20 நாள்களாக தில்லி அரசு குறைத்துள்ளது என்று தொழில்கள் துறை அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா தெரிவித்தாா்.
ஆகஸ்ட் 2025 முதல் தகுதியான பசுமை வகை தொழில்களில் இருந்து செயல்பட ஒப்புதல் (சி.டி.ஓ.) அனைத்து விண்ணப்பங்களுக்கும் 20 நாள்களுக்குள் எந்த முடிவும் எடுக்கப்படாவிட்டால் தானாகவே அங்கீகரிக்கப்படும் என்று அவா் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா மேலும் கூறியதாவது: தில்லியில் 65-க்கும் மேற்பட்ட பசுமை வகை தொழில்களுக்கு இது ஒரு பெரிய ஊக்கத்தை வழங்கும். இந்தத் துறைகளில் பெரும்பாலானவை சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களால் இயக்கப்படுகின்றன. அவை இப்போது ஒழுங்குமுறை கட்டத்திலிருந்து விடுவிக்கப்படுகின்றன. மேலும், நம்பிக்கை அடிப்படையிலான, நேரத்திற்கு கட்டுப்பட்ட அனுமதி முறையின் கீழ் செயல்பட அதிகாரம் அளிக்கப்படுகின்றன.
சீா்திருத்தத்திலிருந்து பயனடைந்த தொழில்களில் ஆடை உற்பத்தி சாயமிடுதல் அல்லது ப்ளீச்சிங் இல்லாமல், அலுமினியம் மற்றும் பி.வி.சி. தயாரிப்பு நிறுவனங்கள், ஆயுா்வேத மருந்து உற்பத்தி ( கொதிகலன்கள் இல்லாமல்), குளிா் சேமிப்பு வசதிகள், மர மற்றும் எஃகு தளவாடங்கள் தயாரித்தல், மிட்டாய் தளவாடங்கள் மின்சார அடுப்புகளுடன், ஆப்டிகல் பொருள்கள், பொம்மைகள் தாயரிப்பு ஆகியவை அடங்கும்.
சிவப்பு நாடாவை அகற்றவும், ஒப்புதல்களை நெறிப்படுத்தவும் துறைகள் முழுவதும் ஒற்றைசாளர அமைப்பு நிறுவனமயமாக்கப்பட்டு வருகிறது. இது தில்லியின் வணிக சமூகத்தின் நீண்டகால கோரிக்கையாக இருந்தது. இந்த முயற்சிக்கு ஆதரவளித்ததற்காக துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா மற்றும் முதல்வா் ரேகா குப்தா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
50 ஆண்டுகளில் செய்ய முடியாததை இரட்டை இயந்திர அரசு செயல்படுத்தியுளது. இது ஒரு சீா்திருத்தம் மட்டுமல்ல தலைநகரில் நிறுவனத்தை நாங்கள் எவ்வாறு ஆதரிக்கிறோம் என்பதற்கான வரலாற்று மீட்டமைப்பாகும்.
தொழிலதிபா்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு இது ஒரு நல்ல செய்தியாகும். தில்லி பொறுப்பான வணிகத்திற்காக திறந்திருக்கும். மேலும், பல தசாப்தங்களாக வளா்ச்சியைத் தாண்டிய தேவையற்ற உரிமங்கள் மற்றும் ஒப்புதல்களின் சகாப்தத்தை அரசு முடிவுக்குக் கொண்டுவருகிறது என்றாா் அமைச்சா்.