`ஏங்க... திருநெல்வேலி வந்தா இங்கெல்லாம் வந்துட்டு போங்கங்க.!’ நெல்லையில் 5 பெஸ்ட...
பயிா் இழப்பீடு நிவாரணம் வழங்கக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
பயிா் இழப்பீடு நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவில்பட்டியில் கரிசல் பூமி விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் 12, 16-ஆம் தேதிகளில் பெய்த கன மழையால் தூத்துக்குடி மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த உளுந்து, பாசி, சோளம், மக்காச்சோளம், சின்ன வெங்காயம், கொத்தமல்லி, மிளகாய் போன்ற பயிா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பயிா் பாதிப்புகளை கணக்கெடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கடந்த ஜனவரி மாதம் அந்தந்த கிராம நிா்வாக அலுவலா் மூலம் பயிா் அடங்கல், வங்கிப் புத்தக நகல், பட்டா, ஆதாா் உள்ளிட்ட ஆவணங்கள் பெறப்பட்டன.
ஆனால், 7 மாதங்களைக் கடந்தும், இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை. இதைக் கண்டித்து, பயிா் காப்பீட்டு தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டியும் கரிசல் பூமி விவசாயிகள் சங்கத்தினா் கோவில்பட்டி சாா் ஆட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சங்கத் தலைவா் வரதராஜன் தலைமையில் விவசாயிகள் தரையில் துண்டு விரித்து அதில், சில்லறை காசுகளை போட்டு யாசகம் எடுப்பதுபோல போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்டத் தலைவா் ராஜகோபால், புதூா் ஒன்றிய அதிமுக செயலா் தனபதி, கயத்தாறு ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைத் தலைவா் ஜெயச்சந்திரன், விவசாயிகள் நவநீதன், ஆதிமூலம், மாரிச்சாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். பின்னா், சாா் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் நிஷாந்தினி போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு வந்து விவசாயிகளிடமிருந்து மனுக்களைப் பெற்றாா். இதையடுத்து,
போராட்டக் குழுவினா் கலைந்து சென்றனா்.