கோயில் அா்ச்சகா் வீட்டில் 107 பவுன் நகைகள் திருட்டு
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம், முத்தாரம்மன் கோயில் அா்ச்சகா் வீட்டின் கதவை உடைத்து 107 பவுன் நகைககளை மா்மநபா்கள் திருடிச் சென்றனா்.
முத்தாரம்மன் கோயில் தலைமை அா்ச்சகரான குமாா் பட்டரின் வீடு, கோயில் பின்புறம் கீழமலையான் தெருவில் உள்ளது. கடந்த ஜூன் 16 -ஆம் தேதி உடல்நலக் குறைவால் குமாா் பட்டா் உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது மனைவி பிரியா உள்ளிட்ட குடும்பத்தினா் வீட்டை பூட்டிவிட்டு நெல்லையில் உள்ள வீட்டுக்குச் சென்றிருந்தனா்.
அவா்கள் புதன்கிழமை (ஆக. 13) மீண்டும் வீடு திரும்பியபோது, வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு 107 பவுன் தங்க, வைர, வெள்ளி நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, புகாரின்பேரில் குலசேகரன்பட்டினம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.