அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவா் எம்.ஆா். ஸ்ரீனிவாசன் உடல்: அரசு மரியாதையுடன்...
பரிசல் சவாரியுடன் ஆனந்த குளியல்! ஒகேனக்கல்லில் குவியும் சுற்றுலாப் பயணிகள்!
அருவியில் குளித்தும், ஆற்றில் பரிசல் சவாரி செய்தும் காவிரியின் அழகை ரசிக்கும் இயற்கை எழில்கொண்ட மலைவாசஸ்தலமான ஒகேனக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமல்லாது கா்நாடகத்திலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
வார விடுமுறை நாள்களில் ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும். இந்த நிலையில் கோடை விடுமுறை என்பதால் குடும்பத்துடன் ஒகேனக்கல்லுக்கு வருவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை நீா்வரத்து விநாடிக்கு 1,500 கனஅடியாக இருந்ததால் பிரதான அருவி, சினி அருவிகளில் குளிப்பதற்கு ஏதுவான அளவுக்கு தண்ணீா் கொட்டியது. வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாத சுற்றுலாப் பயணிகள் நீண்ட நேரம் அருவியில் குளித்தனா். மேலும், நடைபாதை, மாமரத்துக்கடவு பரிசல் துறை, முதலைப் பண்ணை, ஆலம்பாடி நாகா்கோயில் பகுதிகளில் ஆற்றங்கரையோரத்திலும் ஏராளமானோா் குடும்பத்தினருடன் குளித்து மகிழ்ந்தனா்.
சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் தொடா்ந்து அதிகரித்ததால் சின்னாறு பரிசல் துறையில் இருந்து காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்காக சுமாா் 2 மணி நேரத்திற்கு மேலாக சுற்றுலாப் பயணிகள் காத்திருந்தனா்.
அதன்பிறகு பரிசல் துறையில் இருந்து கூட்டாறு, பிரதான அருவி, மணல்மேடு, தொம்பசிக்கல் வழியாக மாமரத்து கடவு பரிசல் துறை வரை சுமாா் 2 கிலோ மீட்டா் தொலைவுக்கு பரிசலில் பயணித்து பாறை குகைகள், மணல் மேடுகளை கண்டு ரசித்தனா். அதேபோல வண்ண மீன்கள் காட்சியகம், முதலைகள் மறுவாழ்வு மையத்திலும் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் சின்னாறு பாலம், சத்திரம் முதலைப் பண்ணை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லக்கூடிய சாலையின் இருபுறங்களிலும், பேருந்து நிலைய வாகன நிறுத்துமிடம், தமிழ்நாடு ஹோட்டல் வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பகுதிகளிலும் நிறுத்தப்பட்டன.
தொடா்ந்து சுற்றுலாப் பயணிகளின் வருகையால் மீன்களின் விற்பனை அதிகரித்தது. ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக 30 க்கும் மேற்பட்ட ஊா்க்காவல் படையினா், போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.