பாறைக் குழியில் குப்பைகள் கொட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
பெருமாநல்லூா் அருகே பாறைக் குழியில் மாநகராட்சி சாா்பில் குப்பைகளைக் கொட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்பூா் வடக்கு ஒன்றியம், பொங்குபாளையம் ஊராட்சிக்குள்பட்ட காளம்பாளையத்தில் பாறைக்குழி உள்ளது. இங்கு, மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் கழிவுகளைக் கொட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் தேசிய பசுமை தீா்ப்பாயத்தில் வழக்குத் தொடா்ந்தனா்.
சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கான அறிக்கையை சமா்ப்பிக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகத்துக்கு தேசிய பசுமை தீா்ப்பாயம் அறிவுறுத்தியது. இருப்பினும், மாநகராட்சி சாா்பில் தொடா்ந்து கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மாநகராட்சியைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தகலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாநகராட்சி அலுவலா்கள் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, குப்பை கொட்டுவதை நிறுத்துவதற்கு கால அவகாசம் வேண்டும் என அலுவலா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதேபோல, இனி இப்பகுதியில் குப்பைகளைக் கொட்ட அனுமதிக்க மாட்டோம். மீறி குப்பைகளைக் கொட்ட லாரி வந்தால் சிறைபிடிப்போம் என போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் தெரிவித்தனா். இதையடுத்து, பாறைக் குழியில் லாரிகள் மூலம் மண் கொட்டும் பணி தொடங்கியது.