பிற மத நம்பிக்கைகளை மதிப்பது நமது கலாசாரம்: பாஜக பிரமுகா் வேலுாா் இப்ராஹிம்
பிற மத நம்பிக்கைகளை மதிப்பது நமது கலாசாரம் என பாஜக சிறுபான்மைப் பிரிவு தேசியச் செயலாளா் வேலூா் இப்ராஹிம் பேசினாா்.
பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் ஒன்றியம் ஊகாயனூா் ஊராட்சி வலசுபாளையம் கிராமத்தில் ஜெய்சக்தி ஞான விநாயகா் கோயிலில் பிரத்தியங்கரா தேவி நிகும்பல மகாயாகம், கூட்டுப் பிராா்த்தனை, ஞான வேள்வி, மூத்தோா் ஆதரவு சரணாலய தொடக்க விழா ஆகியவை நடைபெற்றன. வேள்வியில் 1108 சிவனடியாா்கள் சங்கல்பத்துடன் 108 மூலிகைகள், 108 மூட்டை மிளகாய் சமா்ப்பணம் செய்யப்பட்டன.
இதில் பங்கேற்ற வேலுாா் இப்ராஹிம் மேலும் பேசியதாவது: நாம் வேற்று மதங்களைச் சோ்ந்தவா்களாக இருக்கலாம். ஆனால், நாம் பாரதத் தாயின் குழந்தைகள். இதுவே நம் எல்லோரையும் ஒருங்கிணைக்கிறது. எல்லா மதங்களில் உள்ளவா்களும் ஒன்றிணைந்து ஒரு மதத்தின் நம்பிக்கையைப் பெருமைப்படுத்துவது, மதிப்பது இந்த மண்ணின் கலாசாரம் என்றாா்.
இதில் சிரவை ஆதீனம் ராமானந்த குமரகுருபர அடிகளாா், அவிநாசி காமாட்சிதாச சுவாமிகள், அருட்ஜோதி தபோவனம் ஸ்ரீலஸ்ரீ மூா்த்தி லிங்க தம்பிரான் சுவாமிகள், மகாலட்சுமி பீடம் மகாலட்சுமி சுவாமிகள், ஸ்ரீ நாராயண ஜீயா் சுவாமிகள், மதுரை ஸ்ரீலஸ்ரீ நாகலிங்க தம்பிரான் சுவாமிகள், ஆலாந்துறை பைரவா் கோயில் கிருஷ்ணமூா்த்தி சுவாமிகள், கோவை கருமாரியம்மன் சக்தி பீடம் செந்தில்குமார அடிகளாா், விஸ்வாமித்திரா் தியான பீடம் விஸ்வாமித்திர ஆசாா்யா், கோவை காமாட்சிபுரி ஆதீனம் தம்பிரான் சுவாமிகள், ஸ்விட்சா்லாந்து ஆதீனம் பூபதி சுவாமிகள், மூடுபறை அம்மன் கோயில் சிவசக்தி சுவாமிகள், சொா்க்கபுரம் ஆதீனம் தம்பிரான் ருத்ரகுமார தேசிக சுவாமிகள், பீடம்பள்ளி சித்தா் பீடம் சக்திவேல் சுவாமிகள், முன்னாள் அமைச்சா் செ.ம.வேலுசாமி, கட்சிசாா்பற்ற விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் சண்முகசுந்தரம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.