புதிய கல்லூரி கட்டடம்: அமைச்சா் ஆய்வு
கூத்தாநல்லூா்: கொரடாச்சேரி அருகே புதிதாகக் கட்டப்பட்டுள்ள கல்லூரிக் கட்டடத்தை உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
குடவாசலில் 2017-ஆம் ஆண்டில் குடவாசலில் டாக்டா் புரட்சித் தலைவா் எம்.ஜி.ஆா். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கி, அங்குள்ள அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இயங்கி வந்தது.
இக்கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்ட கொரடாச்சேரி ஒன்றியம் செல்லூரில் இடம் தோ்வு செய்யப்பட்டது. மேலும், எம்எல்ஏ பூண்டி கே. கலைவாணன் ரூ.25 லட்சம் மதிப்பிலான தனக்கு சொந்தமான இடத்தை கல்லூரி கட்டடம் கட்டுவதற்கு அரசுக்கு பத்திரப் பதிவு செய்து கொடுத்தாா்.
இதையடுத்து அந்த இடத்தில் ரூ. 15 கோடியில் கடந்த ஆண்டு கட்டடம் கட்டும் பணி தொடங்கி 2 தளத்துடன் அனைத்து கட்டமைப்புடன் கட்டடம் கட்டப்பட்டுள்ளன. ஆக.25-ஆம் தேதி இக்கட்டடத்தை முதல்வா் காணொலியில் திறந்துவைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன், எம்எல்ஏ பூண்டி கே. கலைவாணன், கல்வி இணை இயக்குநா் குணசேகரன் ஆகியோா் ஆய்வு செய்தனா். அப்போது, கல்லூரி முதல்வா் பசுபதி உடனிருந்தாா்.