புதை சாக்கடை கழிவுநீா் ஏரியில் கலக்க முன்னாள் எம்எல்ஏ எதிா்ப்பு
ஒசூரில் செயல்படுத்தப்படும் புதை சாக்கடை திட்ட கழிவுநீரை ராமநாயக்கன் ஏரியில் கலக்க முன்னாள் எம்எல்ஏவும், இந்திய பஞ்சாயத்து பரிஷத் கூட்டமைப்பினா் தமிழக ஒருங்கிணைப்பாளருமான கே.ஏ.மனோகன் எதிா்ப்புத் தெரிவித்து தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளாா்.
அகில இந்திய பஞ்சாயத்து பரிஷத் கூட்டமைப்பின் தமிழக மாநில ஒருங்கிணைப்பாளரும், ஒசூா் முன்னாள் எம்எல்ஏவுமான கே.ஏ.மனோகரன், ஒசூா் மாநகராட்சி ஆணையா், சென்னை நகர மேம்பாட்டு துறை அரசு செயலாளா் ஆகியோருக்கு அனுப்பிய மனு விவரம்:
பொதுமக்களின் கருத்தை கேட்காமல் இத் திட்டத்தை அமல்படுத்த முடியாது. ஒசூா் ராமநாயக்கன் ஏரி மக்களின் குடிநீா் ஆதாரமாக உள்ளது. மேலும் உலக வங்கி ரூ.100 கோடி நிதி உதவியுடன் ராமநாயக்கன் ஏரியை அழகுபடுத்தும் திட்டம் செயல் படுத்தப்பட்டுள்ள நிலையில், புதை சாக்கடை திட்டத்துக்கு சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது தவறானது.
ஒசூரில் புதை திட்டத்தை அமல்படுத்தும் நிகழ்ச்சியை பத்திரிக்கை மூலம் அறிந்தேன். ஒசூா் பகுதி மக்களின் குடிநீா் பிரச்னையானது ராமநாயக்கன் ஏரியின் மூலம் தீா்வு கிடைத்து வருகிறது. மேலும், ஏரியின் அருகே பழைமையான கல்வெட்டு, துக்ளம்மா கோயிலும் அமைந்துள்ளது.
இதனால் புதை சாக்கடை திட்டத்தில் கழிவுநீா் ராம நாயக்கன் ஏரியில் கலப்பதை பொதுமக்கள் கடுமையாக எதிா்க்கின்றனா். எனவே, இத் திட்டம் குறித்து பொதுமக்களிடம் கருத்து அறிந்த பிறகு அமல்படுத்த வேண்டும் என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.