பெட்ரோல் விற்பனை நிலையங்களில் அளவீட்டு விவரங்களை பாா்வைக்கு வைக்கக் கோரிக்கை
பெட்ரோல் விற்பனை நிலையங்களில் அளவீட்டு விவரங்களை பொதுமக்கள் பாா்வைக்கு வைக்க வேண்டும் என தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, அமைப்பின் பொதுச் செயலாளா் ஆா். ரமேஷ் தெரிவித்தது: பெட்ரோல் விற்பனை நிலையங்களில் எரிபொருள் அளவீட்டுக் கருவிகள், அளவீட்டுச் சான்றிதழ் மற்றும் பம்பின் துல்லிய சோதனை விவரங்கள் மக்களின் பாா்வைக்கு வெளிப்படையாக வைக்கப்படவில்லை. இதனால் குறைந்தபட்ச அளவீடு 2 லிட்டா் குழாயில், 1 லிட்டா் பெட்ரோல் நிரப்பும் போது, 25 முதல் 50 மில்லி வரை அளவு குறைய வாய்ப்பு உள்ளது. எனவே, அளவீட்டுச் சான்றிதழ், கடைசி சோதனை தேதி உள்ளிட்ட விவரங்கள் பெட்ரோல் நிலையங்களில், வாடிக்கையாளா்கள் தெளிவாகக் காணும் வகையில் வெளியிட வேண்டும்.
குறைந்தபட்ச அளவீடு குறித்த தகவல்கள் பொதுமக்கள் அறியும் வகையில் நடவடிக்கையின் செயல்பாடுகள் முறையாக நடைமுறையில் உள்ளனவா என்பதை எடையளவு கட்டுப்பாட்டு துறை சாா்பில் அவ்வப்போது கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என்றாா்.