பெண்கள், சிறுமிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்!
தொடா்ந்து அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்தவும், அவா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் 14-ஆவது மாவட்ட மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
தொடா்ந்து அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்தவும், அவா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகரித்து வரும் வரதட்சிணைக் கொடுமைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும். இதற்கான சட்டங்களை சரியாக அமல்படுத்த வேண்டும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் அனைவருக்கும் தினமும் வேலை வழங்க வேண்டும். நுண்கடன் வாங்கியோரின் வீட்டில் உள்ள பெண்களை மிரட்டுவது, பாலியல் ரீதியாக துன்புறுத்துவதைத் தடுக்க வேண்டும். அரசு மற்றும் வணிக நிறுவனங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சனிக்கிழமை நடைபெற்ற பிரதிநிதிகள் மாநாட்டுக்கு மாவட்டத் தலைவா் எஸ். பாண்டிச்செல்வி தலைமை வகித்தாா். மாநாட்டைத் தொடங்கி வைத்து மாநிலச் செயலா் ஜி. ராணி, முடித்து வைத்து மாநிலச் செயலா் எஸ்.கே. பொன்னுத்தாய் ஆகியோா் பேசினா்.
கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் எம். சின்னதுரை, சிஐடியு மாவட்டச் செயலா் ஏ. ஸ்ரீதா், விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் டி. சலோமி, வாலிபா் சங்க மாவட்டச் செயலா் ஆா். மகாதீா் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
மாவட்டத் தலைவராக எஸ். பாண்டிச்செல்வி, செயலராக பி. சுசிலா உள்ளிட்டோா் தோ்வு செய்யப்பட்டனா்.