பைக் மோதியதில் காவலாளி உயிரிழப்பு
செய்யாறு அருகே இரு பைக்குகள் மோதி விபத்துக்குள்ளானதில், காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த காவலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், வடமணப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயபாலன் (63). இவா், அப்துல்லாபுரம் பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் காவலாளியாக வேலை செய்து வந்துள்ளாா்.
இவா், உடல் நலம் சரியில்லாத அவரது மனைவிக்கு அசனமாப்பேட்டையில் மருந்து வாங்கிக் கொண்டு வீட்டுக்கு பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தாா்.
காஞ்சிபுரம் - ராந்தம் சாலையில் பெருமாந்தாங்கல் அரசு மதுக் கடை அருகே வந்தபோது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த ஜெயபாலை அருகில் இருந்தவா்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செய்யாறு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜெயபாலன் அங்கு சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், மோரணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.