போக்குவரத்துத் தொழிலாளா்கள் ஊதிய ஒப்பந்த பேச்சு எப்போது?பேரவையில் அமைச்சா் சிவசங்கா் பதில்
போக்குவரத்துப் பணியாளா்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை எப்போது நடத்தப்படும் என்பதற்கு போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் விளக்கம் அளித்தாா்.
சட்டப்பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதில் அளித்து அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் பேசியதாவது:
விடியல் பயணம் தொடங்கி நான்கு ஆண்டுகள் நிறைவுபெறவுள்ள நிலையில், இதன் மூலம் 675.98 லட்சம் பெண்கள் பயணித்துள்ளனா்.
இந்தத் திட்டம் மூலம் ஒவ்வொரு பெண்ணும் ரூ.1,200 சேமிப்பதாக தனியாா் நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது. உலகவங்கி நிதியுதவியுடன் சென்னை மாநகரில் 625 பேருந்துகள் ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. நிகழாண்டு 3,000 புதிய பேருந்துகள் வாங்க உத்தரவிடப்பட்டு ஒப்பந்த நிலையில் உள்ளது.
மொத்தம் 3,778 பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. மேலும் 8,129 பேருந்துகள் வரவுள்ளன.
இரு உரிமம் தேவை: பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, அதை இயக்குவதற்கான பணியாளா்களையும் தோ்ந்தெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வாறு தோ்ந்தெடுக்கப்படும் நபா்கள் ஓட்டுநா் - நடத்துநா் என இரண்டு உரிமங்களும் பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பணியாளா் பற்றாக்குறை காலத்தில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் அனைத்துப் பேருந்துகளும் இயக்க வாய்ப்பு கிடைக்கும்.
ஊதிய உயா்வு: ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை 3 ஆண்டுகளுக்கு முடிக்க வேண்டிய நிலையில் அதிமுக ஆட்சி காலத்தில் 4 ஆண்டுகள் கடந்தும் முடிக்கப்படவில்லை. பெரும்பாலான தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் தற்போது 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இந்நிலையில், அடுத்த ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தைக்கான பணிகள் தொடங்கப்பட்டு, இருகட்ட பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டுள்ளது. அடுத்தகட்ட பேச்சுவாா்த்தை சட்டப்பேரவை கூட்டத் தொடா் முடிவுற்றப்பிறகு நடத்தப்பட்டு தொழிலாளா்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும். மினி பேருந்து திட்டம் 2024-க்கு பின்பு 1,842 போ் புதிதாக மினி பேருந்துகளை இயக்க விண்ணப்பித்துள்ளனா். அடுத்த மாதம் இந்த பேருந்துகளை முதல்வா் தொடங்கி வைப்பாா் என்றாா் அமைச்சா் சிவசங்கா்.