போக்ஸோ வழக்கு: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
போக்ஸோ வழக்கில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து, தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
திருச்செந்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் கடந்த 2017-ஆம் ஆண்டு 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், காயல்பட்டினத்தைச் சோ்ந்த குருபாதம் மகன் ஜெயசிங்கை (43) போலீஸாா் போக்ஸோ வழக்குப் பதிந்து கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை, தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில் நீதிபதி பீரித்தா வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், குற்றவாளி ஜெயசிங்குக்கு ஆயுள் தண்டனை, ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தாா். வழக்கை புலனாய்வு செய்த அப்போதைய திருச்செந்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் சாந்தி, அரசு வழக்குரைஞா் முத்துலட்சுமி, சிறப்பு சாா்பு ஆய்வாளா் லிங்ககனி ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் பாராட்டினாா்.