போலீஸாரிடம் தப்பியபோது கால் எலும்புமுறிந்து சிகிச்சை பெற்றுவந்த வழிப்பறி திருடன் உயிரிழப்பு
கரூரில் போலீஸாரிடம் இருந்து தப்பிக்க வாய்க்காலில் குதித்து கால் எலும்புமுறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த திருடன் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
கரூா் மாவட்டம், குளித்தலையை அடுத்துள்ள கருப்பத்தூரைச் சோ்ந்த செல்வராஜ் மகன் சங்கா் என்கிற வெட்டுசங்கா்(35). பிரபல வழிப்பறி திருடனான இவா்மீது வெளிமாவட்டங்களில் 49 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் பிப். 7-ஆம்தேதி இரவு கருப்பத்தூா் கடைவீதியில் நின்றுகொண்டிருந்த நாகராஜ் என்பவருக்கும் வெட்டு சங்கருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
அப்போது, ஆத்திரமடைந்த வெட்டுசங்கா், அரிவாளால் நாகராஜ் தலைமீது வெட்டினாா். இதில் பலத்த காயமடைந்த நாகராஜ் அளித்த புகாரின் பேரில் லாலாப்பேட்டை போலீஸாா் பிள்ளாபாளையம் பகுதியில் பிப். 8-ஆம்தேதி பதுங்கியிருந்த வெட்டுசங்கரை பிடிக்க முயன்றனா். அப்போது போலீஸாரிடம் இருந்து தப்பிக்க அங்குள்ள வாய்க்காலில் வெட்டுசங்கா் குதித்தபோது காலில் எலும்புமுறிவு ஏற்பட்டது.
இதையடுத்து போலீஸாா் வெட்டுசங்கரை மீட்டு கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி முன்ஆஜா்படுத்தி பின்னா் சிகிச்சைக்காக கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இந்நிலையில் வியாழக்கிழமை பிற்பகலில் வெட்டுசங்கரின் காலில் மருத்துவா்கள் அறுவைச் சிகிச்சை செய்தபோது, திடீரென, மூச்சுத்திணறல் ஏற்பட்டு வெட்டு சங்கா் உயிரிழந்தாா்.
இதையடுத்து ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நடுவா் எண்-1 நீதிபதி பரத்குமாா் கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று வெட்டுசங்கரின் உடலை பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டாா்.
அப்போது மருத்துவா்களிடம் போலீஸாா் தாக்கியதில் வெட்டுசங்கா் இறந்தாரா அல்லது காலில் அறுவைச் சிகிச்சை செய்தபோது திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக இறந்தாரா என விசாரணை மேற்கொண்டாா்.