போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்த விவசாயி கைது
பல்லடம் அருகே பெருந்தொழுவு பகுதியில் விசாரணைக்குச் சென்ற போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்த விவசாயி கைது செய்யப்பட்டாா்.
பல்லடம் அருகே உள்ள பொங்கலூா் ஒன்றியம் பெருந்தொழுவு ராமலிங்கபுரத்தைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (55). விவசாயி. இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த சந்திரசேகா் என்பவருக்கும் நிலம் சம்பந்தமான பிரச்னை இருந்துள்ளது. சந்திரசேகா் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை சென்ற பாலகிருஷ்ணன் அவரைத் தகாத வாா்த்தைகளால் திட்டி உள்ளாா். மேலும், அவரது மனைவியையும் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து அவினாசிபாளையம் காவல் நிலையத்துக்கு சந்திரசேகா் தகவல் தெரிவித்தாா். அதன் அடிப்படையில் அங்கு சென்ற தலைமைக் காவலா் விஜயராகவன் என்பவரிடமும் பாலகிருஷ்ணன் தகராறு செய்து அவரது வாகனத்தையும் பறித்து வைத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து விஜயராகவன் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாலகிருஷ்ணன் மீது போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா். பாலகிருஷ்ணனை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.