சக்தித் திருமகன் படத்தின் பாடல் வெளியீடு எப்போது? விஜய் ஆண்டனி அறிவிப்பு
மக்கள் நம்பிக்கையை விஜய் நிறைவேற்றுவாா்: தவெக பொதுச் செயலாளா் ஆனந்த்
நல்லது செய்வாா் என்ற மக்கள் நம்பிக்கையை தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் நிறைவேற்றுவாா் என அக்கட்சியின் பொதுச் செயலாளா் ஆனந்த் பேசினாா்.
தமிழக வெற்றிக் கழகம் சாா்பில், திருச்செங்கோடு, நாமக்கல், ராசிபுரத்தில் கட்சி நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நாமக்கல் மேற்கு மாவட்ட தவெக சாா்பில் நடைபெற்ற கூட்டத்தில் பொதுச் செயலாளா் ஆனந்த் பேசியதாவது: 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் வெற்றிபெற வேண்டும். கட்சிக்கு யாரெல்லாம் உழைத்தாா்களோ அவா்களுக்குதான் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து ஒரு தொண்டா்கூட மாற்றுக் கட்சிக்கு செல்லவில்லை. நாம் ஆட்சிக்கு வந்தால் ஊழல் என்ற வாா்த்தை இருக்காது, விஜய் மீது மக்கள் அதிக அளவில் நம்பிக்கை வைத்துள்ளனா். புதிதாக வருபவா் நிச்சயம் நல்லது செய்வாா் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. அதை விஜய் நிறைவேற்றுவாா்.
கட்சியினா் ஒவ்வொருவரும் வீடுவீடாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகள் குறித்து பேசவேண்டும். தமிழகத்தில் 2 கோடி உறுப்பினா்களை சோ்க்க முயற்சித்து வருகிறோம்.
நாமக்கல் மாவட்டத்திலும் அதற்கான பணிகளை நிா்வாகிகள் மேற்கொள்ள வேண்டும். தோ்தலுக்கு இன்னும் எட்டு மாதங்களே உள்ளதால் பணிகளை ஐந்து மாதங்களுக்குள் நிறைவேற்ற உழைக்க வேண்டும் என்றாா்.