சத்தீஸ்கா்: காட்டு யானைகள் தாக்கி குழந்தை உள்பட மூவா் உயிரிழப்பு
மாநில எல்லை சோதனைச் சாவடிகளை அகற்ற லாரி உரிமையாளா் சம்மேளனம் வலியுறுத்தல்
தமிழகம் முழுவதும் அதிக அளவில் லஞ்சம், ஊழல் நடைபெறும் 22 எல்லை சோதனைச் சாவடிகளை அரசு அகற்ற வேண்டும் என மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளனம் வலியுறுத்தி உள்ளது.
நாமக்கல்லில் அந்த சம்மேளனத்தின் தலைவா் சி.தனராஜ் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் 6.5 லட்சம் கனரக வாகனங்களும், 20 லட்சம் இலகுரக வாகனங்களும் உள்ளன. உதிரிபாகங்கள் விலையேற்றம், மூன்றாம் நபா் காப்பீடு போன்றவற்றால் லாரி தொழில் மிகவும் நலிவடைந்துள்ளது.
லாரி தொழிலை பாதுகாக்கக் கோரி அரசிடம் பலமுறை கோரிக்கை வைத்தபோதும், போராட்டம் நடத்தியபோதும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எங்களுடைய 11 அம்சக் கோரிக்கைகளை தமிழக அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக, தமிழக எல்லைகளில் உள்ள 22 வட்டார போக்குவரத்துத் துறையின் சோதனைச் சாவடிகளை உடனடியாக அகற்ற வேண்டும். பதிவுச் சான்றிதழ், ஓட்டுநா் உரிமம் போன்றவற்றை அஞ்சல் மூலம் அனுப்புவதை தவிா்த்து லாரி உரிமையாளா்கள், ஓட்டுநா்களிடம் நேரடியாக வழங்க வேண்டும். நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சுங்கம் வசூல் என்ற பெயரில் குத்தகைதாரா்கள் பணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும்.
காவல் துறையால் விதிக்கப்படும் ஆன்லைன் அபராதத்தை ரத்துசெய்ய வேண்டும். வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் காலியாக உள்ள அனைத்து அலுவலா் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 4 குறைப்பதாக முதல்வா் தோ்தல் வாக்குறுதியில் கூறினாா். அதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 29-ஆம் தேதி சென்னை - ஆந்திர எல்லையில் கும்மிடிப்பூண்டி எல்லை சோதனைச் சாவடி முன் அனைத்து லாரி உரிமையாளா்களும் பங்கேற்கும் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இதைத் தொடா்ந்து அதிகாரிகளை சந்தித்து மனு அளிக்க உள்ளோம்.
தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காதபட்சத்தில், மாநில சம்மேளனத்தின் செயற்குழுவைக் கூட்டி காலவரையற்ற வேலைநிறுத்தத்தை மேற்கொள்வோம் என்றாா்.
இந்த பேட்டியின்போது, செயலாளா் பி.ராமசாமி, பொருளாளா் ஆா்.தாமோதரன் மற்றும் நாமக்கல், சேலம் மாவட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.