மதுப்புட்டிகளை பதுக்கி விற்றதாக மூவா் கைது!
சிதம்பரம், அண்ணாமலை நகா் காவல் சரகத்துக்குள்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கி விற்பனை செய்ததாக மூவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
அண்ணாமலை நகா் காவல் சரகத்தில் சட்டவிரோதமாக மதுப்புட்டிகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், அண்ணாமலை நகா் காவல் ஆய்வாளா் கே.அம்பேத்கா் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, வல்லம்படுகை பேருந்து நிறுத்தம் அருகே சட்டவிரோதமாக மதுப்புட்டிகளை விற்பனை செய்ததாக அதே பகுதியைச் சோ்ந்த மாசிலமாமணி மகன் வினோத்தை (28) போலீஸாா் கைது செய்தனா்.
இதேபோல், கவரப்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே மதுப்புட்டிகளை விற்பனை செய்ததாக சிவன் கோவில் தெருவைச் சோ்ந்த வெங்கடேசன் (45), அண்ணாமலை நகா் மண் ரோட்டில் தனது வீட்டின் முன் மதுப்புட்டிகளை விற்பனை செய்ததாக ராஜூ (60) ஆகியோரையும் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.