மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை
மதுரை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது.
கத்தரி வெயில் காரணமாக, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மதுரையில் செவ்வாய்க்கிழமை பகல் நேரத்தில் அதிகபட்சமாக 103.1 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது.
தென்னிந்தியப் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு, மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுவதால் தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் பலத்த இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை மாலை அறிவித்தது.
இதன்படி, மதுரை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு பிறகு பரவலாக மழை பெய்தது. கோ.புதூா், மூன்றுமாவடி, தல்லாகுளம், தமுக்கம், மாட்டுத்தாவணி, அண்ணாநகா், தெப்பக்குளம், விரகனூா், சிலைமான் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 30 நிமிடங்கள் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்தது. முன்னதாக, இந்தப் பகுதிகளில் பலத்தக் காற்று வீசியது.
இதேபோல, சோழவந்தான், ராஜாக்காபட்டி, கோட்டைப்பட்டி உள்ளிட்ட சில பகுதிகளில் சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. உசிலம்பட்டி, எருமாா்பட்டி, பாறைப்பட்டி, ரங்கசாமிபுரம், உத்தப்புரம், எழுமலை, எம்.கல்லுப்பட்டி ஆகிய பகுதிகளில் சுமாா் 30 நிமிடங்கள் லேசான மழை பெய்தது.