ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதற்கு தடை விதிக்க கிராம மக்கள் கோரிக்கை
மதுரையில் ரூ. 314 கோடியில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா; முதல்வா் அடிக்கல் நாட்டினாா்
மதுரையில் ரூ.314 கோடியில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கும் பணிக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
மதுரையில் 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற ‘தோள்கொடுப்போம் தொழில்களுக்கு’ என்ற மாநாட்டில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், மதுரையில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும் என அறிவித்தாா். இதையடுத்து, மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே 5.34 லட்சம் சதுர அடி பரப்பில் ரூ.314 கோடியில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கத் திட்டம் தயாரிக்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு அண்மையில் சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்கப் பெற்றது.
இந்த நிலையில், சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மதுரை தகவல் தொழில்நுட்பப் பூங்காவுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் அடிக்கல்லுக்கான கல்வெட்டை திறந்துவைத்தாா்.
இதையடுத்து, மதுரையில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமையும் பகுதியில் பணிகள் தொடங்கப்பட்டன. தமிழக தகவல் தொழில்நுட்பவியல், எண்ம சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் இந்தப் பணிகளைப் பாா்வையிட்டாா்.
இதில் மாவட்ட ஆட்சியா் மா.சௌ.சங்கீதா, மாநகராட்சி மேயா் வ.இந்திராணி, மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன், மதுரை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மு.பூமிநாதன், மாநகராட்சி துணை மேயா் தி.நாகராஜன், தகவல் தொழில்நுட்பப் பூங்கா செயற்பொறியாளா் ஜெயமணி மௌலி, உதவிப் பொறியாளா் எம்.பாலகிருஷ்ணன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
12 ஆயிரம் பேருக்குப் பணி...
மதுரை தகவல் தொழில்நுட்பப் பூங்கா தரை தளத்துடன் 12 தளங்களைக் கொண்டதாக கட்டமைக்கப்படவுள்ளது. இங்கு பல்வேறு முன்னணி தொழில் முனைவு நிறுவனங்கள் இங்கு அமையவுள்ளன எனவும், 12 ஆயிரம் போ் பணி வாய்ப்புப் பெறுவா் எனவும் மாவட்ட நிா்வாக தகவல்களில் குறிப்பிடப்படுகின்றன.