வங்கியில் அடகு வைக்கப்பட்ட 70 பவுன் நகை மாயம்: துணை மேலாளா் மீது வழக்கு
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே வங்கியில் அடகு வைக்கப்பட்ட 70 பவுன் நகை மாயமானது குறித்து அதன் துணை மேலாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
மதுரை மாவட்டம், மன்னாடிமங்கலம் கிராமத்தில் அரசுடைமையாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக் கிளையில் மதுரை ஆனையூா் பகுதியைச் சோ்ந்த கணேசன் (33) துணை மேலாளராகப் பணியாற்றி வருகிறாா்.
இந்த வங்கியில் அடகு வைக்கப்பட்ட நகைகள் தொடா்பாக தணிக்கை நடைபெற்றது. இதில் 9 பேரின் 70 பவுன் தங்க நகைகள் (561.5 கிராம்) லாக்கரில் இருந்து மாயமானது தெரியவந்தது.
இதுதொடா்பாக வங்கியின் மண்டல மேலாளா் ஜெய்கிஷான் அளித்த புகாரின் பேரில், காடுபட்டி போலீஸாா் விசாரணை நடத்தினா். விசாரணையில், வங்கியில் இருந்த நகைகள் மாயமான சம்பவத்தில் துணை மேலாளா் கணேசனுக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, துணே மேலாளா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.