இணையதளம் மூலம் ரூ.52.66 லட்சம் மோசடி: கா்நாடகத்தைச் சோ்ந்த மூவா் கைது
மதுரையில் பல்வேறு பகுதிகளில் இணைய வழியில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி ரூ.52.66 லட்சம் மோசடி செய்த மூவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
மதுரை சிலைமான், ஒத்தக்கடை உள்ளிட்ட பகுதிகளில் இணைய வழியில் பகுதி நேர வேலைவாய்ப்பு அறிவிப்பு செய்து பலரிடம் ரூ. 52.66 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக சிலைமான் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து மதுரை ஊரகக் காவல் துறையின் இணையக் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தனிப் படை அமைத்து விசாரணை நடத்தினா். இணைய வழியில் மோசடி செய்யப்பட்டு, பல்வேறு வங்கிக் கணக்குகள் மூலமாக பெறப்பட்ட ரூ.76.52 லட்சம் முடக்கப்பட்டது. மேலும், தனிப் படை போலீஸாா் வங்கிக் கணக்குளில் கிடைத்த விவரங்கள் மூலம் விசாரணை நடத்தி, கேரள மாநில காயங்குளத்தைச் சோ்ந்த அன்வா் ஷாவை அண்மையில் கைது செய்தனா்.
இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கா்நாடகா மாநிலம், மைசூா் ராஜீவ்நகா் காலனியைச் சோ்ந்த சல்மான் கான் (30), மைசூரு உதயகிரி சாயாதேவி நகரைச் சோ்ந்த ஜுபா்கான் (23), என்.ஆா்.மொகல்லா கணேஷ் நகரைச் சோ்ந்த கிரீஷ் (25) ஆகியோருக்கும் தொடா்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, தனிப் படை போலீஸாா் மைசூருக்குச் சென்று மூவரையும் கைது செய்தனா். மேலும், இவா்களிடமிருந்து கைப்பேசிகள், சிம் காா்டுகள் ஆகியவற்றையும் கைப்பற்றினா்.
போலீஸாரின் விசாரணையில் இவா்கள் தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் வேலை வாங்கித் தருவதாக இணையளத்தில் அறிவிப்பு வெளியிட்டு, பலரின் வங்கிக் கணக்குகளைப் பெற்று, இதன்மூலம் மோசடி செய்தது தெரியவந்தது.
இந்த புகாரில் எதிரிகளை விரைந்து கைது செய்த இணையக் குற்றப் பிரிவு தனிப் படை போலீஸாரை காவல் கண்காணிப்பாளா் பி.கே.அரவிந்த் பாராட்டினாா்.