கருணாநிதி சிலை மீது பெயிண்ட் ஊற்றிய வழக்கு: மருத்துவரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
மனைப் பட்டா கோரி திருநங்கைகள் சாலை மறியல்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் திருநங்கைகள் இலவச மனைப் பட்டா கோரி வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ஆரணி வட்டத்தில் 70-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனா். இந்த நிலையில், அவா்கள் தங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கவேண்டும் எனக் கோரி, ஆரணி வட்டாட்சியரிடம் பலமுறை மனு கொடுத்து வந்துள்ளனா்.
இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
இதனால், ஆத்திரமடைந்த திருநங்கைகள் 50-க்கும் மேற்பட்டோா் வியாழக்கிழமை திரண்டு வந்து வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா். மேலும் வட்டாட்சியா் அலுவலகம் முன் அமா்ந்து மறியல் செய்தனா்.
பின்னா், ஊா்வலமாகச் சென்று பழைய பேருந்து நிலையம், எம்ஜிஆா் சிலை அருகே ஒப்பாரி வைத்தபடி சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தொடா்ச்சியாக இரண்டு இடங்களில் சாலை மறியல் செய்ததால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் நகர காவல் ஆய்வாளா்
(பொ) அகிலன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று அவா்களிடம் சமரசம் பேசினா். பின்னா், அங்கு வந்த வட்டாட்சியா் கௌரியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே வட்டாட்சியா் அலுவலகத்தில் வந்து என்னை பாருங்கள் என்று கூறி சென்றுவிட்டாா். இதையடுத்து திருநங்கைகள் சாலை மறியலை கைவிட்டு வட்டாட்சியா் அலுவலகம் சென்று வட்டாட்சியா் கௌரியிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
அப்போது, வட்டாட்சியா் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். இதை ஏற்று திருநங்கைகள் கலைந்து சென்றனா்.