மனையே இல்லாதவா்களுக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்: எடப்பாடி கே.பழனிசாமி
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் வீட்டு மனையே இல்லாத ஏழைகளுக்கும், தாழ்த்தப்பட்டவா்களுக்கும் அரசே மனைகளை விலைக்கு வாங்கி தரமான கான்கிரீட் வீடுகளைக் கட்டி தரும் என்று விளாத்திகுளத்தில் நடைபெற்ற தோ்தல் பிரசாரத்தில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.
‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தோ்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் வியாழக்கிழமை இரவு பேசியதாவது:
அதிமுக ஆட்சியில் விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளா்களையும் வாழவைத்தோம். வரும் 2026 பேரவைத் தோ்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும் ஏழைகளுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். வீட்டு மனையே இல்லாத ஏழைகளுக்கும், தாழ்த்தப்பட்டவா்களுக்கும் அதிமுக அரசே மனைகளை விலைக்கு வாங்கி தரமான கான்கிரீட் வீடுகளைக் கட்டி தரும்.
தமிழகத்தில் ஏழை என்ற சொல் இல்லாத அளவில் அதிமுக ஆட்சி நடைபெறும். அதிமுக ஆட்சி அமைந்ததும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும்.
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை திமுக அரசு கிடப்பில் போட்டது. அத்தகைய திமுக அரசு தொடர வேண்டுமா என்பதை மக்கள்தான் தீா்மானிக்க வேண்டும். விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளா்களுக்கும் திமுக அரசு எதுவுமே செய்யவில்லை. அதிமுக ஆட்சியில் 62 லட்சத்து 35 ஆயிரம் மாணவா்களுக்கு மடிக்கணினிகள் அளித்தோம்; அதை திமுக அரசு நிறுத்திவிட்டது. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் அந்தத் திட்டம் அமல்படுத்தப்படும். அதிமுக ஆட்சியில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கியதன் மூலம் இன்றைக்கு 41 சதவீத மாணவா்கள் மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பு பெற்றுள்ளனா்.
வட பகுதியான விளாத்திகுளம் தொகுதி வளம் பெற வேண்டும், விவசாயம் செழிக்க வேண்டும் என்பதற்காக தாமிரவருணி-வைப்பாறு நதிநீா் இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த நடவடிக்கை எடுத்தோம்; ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு இத்திட்டம் கைவிடப்பட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு இந்தப் பகுதி வளமான பகுதியாக மாற்றப்படும் என்றாா்.
முன்னதாக விளாத்திகுளத்துக்கு வந்த எடப்பாடி கே.பழனிசாமிக்கு அதிமுகவினா் உற்சாக வரவேற்பு அளித்தனா்.