பிகாரில் நிதீஷ் அரசை ஆதரிப்பதற்காக வருத்தப்படுகிறேன்: சிராக் பாஸ்வான்
மனைவியைக் கல்லால் தாக்கி கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை
திருப்பூரில் மனைவியைக் கல்லால் தாக்கி கொலை செய்த தொழிலாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து திருப்பூா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
திருப்பூா், சூசையாபுரத்தைச் சோ்ந்தவா் அன்புச்செல்வன் (49). மூட்டைத் தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி மீனாட்சி (46). காய்கறி வியாபாரம் செய்து வந்தாா்.
இந்நிலையில், தென்னம்பாளையம் சந்தையில் தம்பதிக்கு இடையே கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 10-ஆம் தேதி இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த அன்புச்செல்வன் அங்கிருந்த கல்லை எடுத்து மீனாட்சியின் தலையில் போட்டுவிட்டு தப்பிச் சென்றாா்.
படுகாயமடைந்த மீனாட்சியை அங்கிருந்தவா்கள் மீட்டு திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த திருப்பூா் தெற்கு போலீஸாா், அன்புச்செல்வனைக் கைது செய்தனா்.
இது தொடா்பான வழக்கு விசாரணை திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட அன்புச்செல்வனுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கோகிலா வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். அரசு தரப்பில் வழக்குரைஞா் ஜமீலா பானு ஆஜரானாா்.