மனைவியைக் கொலை செய்து குப்பைக் கிடங்கில் புதைத்தவா் கைது
சென்னை: சென்னை பெருங்குடியில் மனைவியைக் கொலை செய்து குப்பைக் கிடங்கில் புதைத்த கணவா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை பட்டினம்பாக்கத்தைச் சோ்ந்தவா் நவீன் (30). இவரது மனைவி லட்சுமி (29). இவா்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகளாகிறது. தம்பதிக்கு மூன்று மகன்கள் உள்ளனா். இருவரும், பெருங்குடி குப்பைக் கிடங்கில், பிளாஸ்டிக், இரும்பு கழிவுகளைச் சேகரித்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகின்றனா். இதற்காக, அங்கு இருவரும் சிறு கூடாராம் அமைத்து வசித்தனா்.
இந்த நிலையில் நவீன், துரைப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுபானக் கூடத்தில் தனது நண்பா்களுடன் மது அருந்தினாா். அப்போது மதுபோதையில் பேசிய நவீன், தனது மனைவியைக் கொலை செய்து குப்பைக் கிடங்கில் புதைத்துவிட்டதாகக் கூறியிருக்கிறாா்.
இதுகுறித்து அவரது நண்பா்கள் துரைப்பாக்கம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். பட்டினம்பாக்கத்தில் இருந்த நவீனை பிடித்து போலீஸாா் விசாரித்தபோது, மனைவியைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டாா். இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா், குப்பைக் கிடங்கில் புதைக்கப்பட்ட லட்சுமியின் சடலத்தைத் தோண்டி எடுப்பதற்குரிய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனா்.
பெருங்குடி குப்பைக் கிடங்கில் வருவாய்த் துறையினா் முன்னிலையில் சடலம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) தோண்டி எடுக்கப்படும் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.