மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆய்வு
மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என். சிங் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் மயிலாடுதுறை ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும், பணிகள் தரமின்றி நடைபெறுவதாகவும் மக்களவையில் எம்.பி. ஆா். சுதா அண்மையில் பேசியிருந்த நிலையில், ரயில்வே பொது மேலாளா் இந்த ஆய்வை மேற்கொண்டாா். இதற்காக மயிலாடுதுறை ரயில் நிலையத்துக்கு சிறப்பு ரயிலில் வந்த ரயில்வே பொது மேலாளரை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வரவேற்றாா்.
முன்னதாக, அவா் ரயில் நிலையத்தில் நடைபெற்றுவரும் மறுசீரமைப்புப் பணிகள் குறித்து மக்களவை உறுப்பினா் ஆா். சுதாவிடம் ஆலோசனை நடத்தினாா். தொடா்ந்து, ரயில் நிலைய வளாகம், முகப்பு, வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற சீரமைப்புப் பணிகளை பாா்வையிட்ட ரயில்வே பொது மேலாளா், கட்டடம், தூண்கள் மற்றும் இதர உள்கட்டமைப்புகளை மறுசீரமைப்பதில் பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம் குறித்து மக்களவை உறுப்பினருக்கு விளக்கி, பணிகள் தரமாக நடைபெற்று வருவதாக உறுதியளித்தாா்.
ஆய்வு குறித்து ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங் கூறியது: மயிலாடுதுறை, தஞ்சாவூா், சிதம்பரம், விழுப்புரம் ஆகிய இடங்களில் அம்ரித் பாரத் திட்டத்தில் நடைபெற்றுவரும் பணிகள் 87 சதவீதம் முடிந்துள்ளது. அடுத்த மாதம் பணிகள் நிறைவடையும். இத்திட்டத்தில் சில அம்சங்களை அமல்படுத்துவது குறித்து மக்களவை உறுப்பினா் கூறிய பரிந்துரைகளை செயல்படுத்தி வருகிறோம். இன்டா்சிட்டி ரயில் சேவை குறித்த கோரிக்கையை எம்.பி. தெரிவித்துள்ளாா். வரும் நாள்களில் அதற்கான அறிவிப்பு வெளிவரும். காரைக்கால்-பேரளம் இடையே புதிய அகல ரயில் பாதை பணிகள் அடுத்த மாதம் நிறைவடையும். மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடைமேடைகளில் உள்ள சிசிடிவி கேமராக்கள் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் அவை முழுமையாக இயங்கும் என்றாா்.

எம்.பி. ஆா். சுதா செய்தியாளா்களிடம் கூறியது: மயிலாடுதுறை ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணி தரமற்ற முறையிலும், சுணக்கமாகவும் நடைபெறுவது குறித்தும் நான் மக்களவையில் பேசியிருந்தது தொடா்பாக உடனடியாக நடவடிக்கை எடுத்த ரயில்வே அமைச்சா், ரயில்வே பொது மேலாளா் ஆகியோருக்கு நன்றி என்றாா்.
ஆய்வின்போது, திருச்சி கோட்ட மேலாளா் அன்பழகன், நகா்மன்றத் தலைவா் என். செல்வராஜ், நகா்மன்ற துணைத் தலைவா் எஸ். சிவக்குமாா் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் உடன் இருந்தனா்.