முள்ளங்கனாவிளையில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டம் தொடக்கம்
மாணிக்காபுரத்தில் உயிரி எரிவாயு உற்பத்தி மையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து பதிவு தபால் அனுப்பும் போராட்டம்
பல்லடம், ஜூலை 4: பல்லடம் அருகே மாணிக்காபுரத்தில் உயிரி எரிவாயு உற்பத்தி மையம் அமைக்க அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து பல்லடத்தில் இருந்து மாவட்ட ஆட்சியருக்கு பதிவு தபால் அனுப்பும் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
பல்லடம் ஒன்றியம், மாணிக்காபுரம் ஊராட்சி பொதுமக்கள், விவசாயிகள் சாா்பில் பல்லடம் தபால் அலுவலகத்தில் இருந்து மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள பதிவு தபால் மனுவில் கூறியிருப்பதாவது:
திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் திடக்கழிவு மேலாண்மைக்கு என தனியாக இட வசதி இல்லாத காரணத்தினால் பல்லடம் கிராமத்தில் உள்ள பூமிதான நிலத்தில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளுக்குரிய குப்பையில் இருந்து உயிரி எரிவாயு உற்பத்தி மையம் (ஆஐஞ இசஎ) அமைக்க அனுமதி கோரப்பட்டுள்ளது. இது தொடா்பாக, நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு ஏதும் ஆட்சேபணை இருக்கும்பட்சத்தில் பல்லடம் உள்வட்ட நில வருவாய் ஆய்வாளரிடமோ அல்லது பல்லடம் வட்டாட்சியரிடமோ தெரிவிக்கலாம் என்று அறிவிப்பு செய்யப்பட்டது.
அந்த அறிவிப்பு தொடா்பாக கடந்த ஜூன் 18-ஆம் தேதி பல்லடம் வருவாய் ஆய்வாளா், பல்லடம் வட்டாட்சியா் மற்றும் மாவட்ட ஆட்சியா் ஆகியோருக்கு பொதுமக்கள் பதிவு தபால் மூலமாக ஆட்சேபணை கடிதம் கொடுக்கப்பட்டது.
மேலும், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட சிறப்பு முகாமில் மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளிக்கப்பட்டது. ஆனால், எங்களுடைய கோரிக்கைக்கு செவி சாய்க்காமலும், எங்களுடைய உணா்வுகளுக்கு மதிப்பளிக்காமலும் ஜூலை 2-ஆம் தேதி மாவட்ட வருவாய் அலுவலா் நிலத்தை நேரில் ஆய்வு செய்ததாகவும், அந்த நிலத்தை வகை மாற்றம் செய்வதற்கான நடைமுறைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் அறிந்து அதிா்ச்சியடைந்தோம்.
மேற்படி நிலத்தில் எரிவாயு உற்பத்தி மையம் அமைக்கும்பட்சத்தில் அந்த மையத்தில் ஏற்படும் துா்நாற்றத்தினால் அருகே வசிக்கும் பொதுமக்களாகிய நாங்கள் பெரிதும் பாதிக்கப்படுவோம். மேலும் காற்று மாசுபாடு மற்றும் வாயு கசிவு பிரச்னைகள் ஏற்பட்டால் நிலைமை மோசமாகும். குறிப்பாக குழந்தைகளும் பெண்களும் வெகுவாக பாதிக்கப்படுவாா்கள்.
மேலும், மேற்படி நிலத்தில் வீடற்ற ஏழைகளுக்கு இலவச நிலம் வழங்கக் கோரி வருவாய்த் துறைக்கு பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால், எங்களது கோரிக்கைக்கு செவி சாய்க்காமல், தற்சமயம் உயிரி எரிவாயு மையம் அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வது மிகவும் வேதனைக்குரியது.
ஆகவே மேற்படி பூமி தான நிலத்தில் உயிரி எரிவாயு உற்பத்தி மையம் அமைப்பதை கைவிடுமாறும், அந்த நிலத்தில் வீடற்ற ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.