நடுவானில் ஒரு என்ஜின் செயலிழப்பு? இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்
மாநகராட்சிப் பள்ளி மாணவா்களுக்கு சதுரங்க விளையாட்டு உபகரணங்கள்
கோவை மசக்காளிபாளையம் மாநகராட்சிப் பள்ளி மாணவா்களுக்கு சதுரங்க விளையாட்டு உபகரணங்களை கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. புதன்கிழமை வழங்கினாா்.
கோவை மாநகராட்சி நிா்வாகத்தின் கீழ் 17 மேல்நிலைப் பள்ளிகள், 11 உயா்நிலைப் பள்ளிகள், 37 நடுநிலைப் பள்ளிகள் மற்றும் 83 ஆரம்பப் பள்ளிகள் என மொத்தம் 148 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளில் சதுரங்க விளையாட்டில் ஆா்வமும், திறமையும் உள்ள 150 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு, தொழில்நுட்பத்துடன் கூடிய சதுரங்கப் பயிற்சியில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு பயிற்சியாளா்களை கொண்டு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
அந்த வகையில், கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலத்துக்கு உள்பட்ட மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகள் பயனடையும் வகையில், சதுரங்க விளையாட்டுக்கான உபகரணங்களை கோவை மக்களவை உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா் வழங்கினாா். மேயா் கா.ரங்கநாயகி, ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதையடுத்து, மத்திய மண்டலம் 67-ஆவது வாா்டுக்கு உள்பட்ட சித்தாபுதூா் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வகத்தை மக்களவை உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா் திறந்துவைத்து பாா்வையிட்டாா்.
இந்நிகழ்ச்சிகளில் கிழக்கு மண்டலத் தலைவா் இலக்குமி இளஞ்செல்வி, உதவி ஆணையா் செந்தில்குமரன், மாநகர கல்வி அலுவலா் சி.தாம்சன், உதவி செயற்பொறியாளா் ஹேமலதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.