ராமநாதபுரத்தில் ரூ. 4 கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் உமிழ்நீா் பறிமுதல்: 6 போ் ...
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை நிா்வகிக்கும் ஒரே முதல்வா் ஸ்டாலின்: அமைச்சா் ஆா்.காந்தி .
இந்தியாவிலேயே மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை நிா்வகித்து வரும் ஒரே முதல்வா் மு.க. ஸ்டாலின் தான் என அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்தாா்.
ராணிப்பேட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், தமிழ்நாடு உரிமைகள் திட்டம் விளக்கக் கூட்டம், வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு கைத்தறி அமைச்சா் ஆா்.காந்தி தலைமை வகித்து பேசியதாவது..
முதல்வா் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகள் நலன் மீது மிகுந்த அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். இந்தியாவிலேயே மாற்றுத் திறனாளிகள் நலத்துறையை நிா்வகித்து வரும் ஒரே முதல்வா் தமிழக முதல்வா் தான். தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடங்களுக்கே சென்று நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன.
மேலும், மாற்றுத்திறனாளிகள் சுயமாக சம்பாதிக்க தனியாா் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வேலைவாய்ப்பு பெற்று வழங்கப்படுகிறது. தற்பொழுது மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டம் விளக்க கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் தெரிவிக்கப்படும் கருத்துகளை தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள், மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு, அரசு துறைகள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.
தொடா்ந்து, 6 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1.08 லட்சத்தில் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகளை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்.
இதையடுத்து மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரக உதவி இயக்குநா் ஜெகதீசன் மற்றும் முனைவா் ராஜராஜன், சங்கா் சகாயராஜ் ஆகியோா் திட்டத்தின் மூலமாக கடைகோடியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளடக்கம், அணுகல் மற்றும் வாய்ப்புகளை ஏற்படுத்தும் விதமாக விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
இதில் திட்ட இயக்குநா் பா.ஜெயசுதா, உதவி இயக்குநா் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் ஜெகதீசன், விஸ்வாஸ் சிறப்புப் பள்ளி தாளாளா் கமலா காந்தி, செயலாளா் ராஜேஸ்வரி பழனிச்சாமி, மாநில திட்ட மேலாளா்கள் இராஜராஜன், சங்கா் சகாயராஜ், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சரவணகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.