அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை வீரா் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்தில் பணிபுரிந்து வந்த வீரா் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
அரக்கோணத்தில் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதளம் உள்ளது. இங்குள்ள கடற்படையின் க்யுக் ரெஸ்பான்ஸ் டீம் எனப்படும் அதிவிரைவு அதிரடிப்படையில் பணிபுரிந்து வந்த பிரவீன்(24) என்ற வீரா், புதன்கிழமை பிற்பகல் தனது குழுவினா் தங்கியிருந்த வளாகத்தில் இருந்த கழிப்பறைக்குச் சென்று அங்கு தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தகவல் அறிந்த கடற்படை காவல் துறையினா் இது குறித்து விசாரணை நடத்தி, சடலத்தை மீட்டு வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.
மேலும், இது குறித்து அரக்கோணம் நகரக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட பிரவீன், கா்நாடக மாநிலம் பெலகாவியைச் சோ்ந்தவா் என்பதும், கடந்த 3 வருடங்களாக ஐஎன்எஸ் ராஜாளியில் பணிபுரிந்து வந்தாா் என்பதும் தெரிய வந்தது.
அவரது கைப்பேசியைக் கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், அவா் தங்கியிருந்த இடத்தில் இருப்போா், அவருடன் பணிபுரிந்தோரிடம் தொடா் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.