மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப் 2, 2ஏ தோ்வுக்கான இலவச பயிற்சி
திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2 மற்றும் 2ஏ தொகுதி தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய அறிவிக்கையின்படி, தொழிலாளா் உதவி ஆய்வாளா், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா், நன்னடத்தை அலுவலா், சாா்-பதிவாளா் நிலை 2 போன்ற தொகுதி 2 பணிகளுக்கும் , முதுநிலை ஆய்வாளா், உதவி ஆய்வாளா், தணிக்கை ஆய்வாளா், உதவியாளா் போன்ற தொகுதி 2ஏ பணிகளுக்கும் செப்டம்பா் 28-இல் முதல்நிலைத் தோ்வு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் தன்னாா்வ பயிலும் வட்டத்தில் முதல்நிலைத் தோ்வுக்கான பயிற்சி வகுப்புகள் ஜூலை 21-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளன. இந்தப் பயிற்சியில் மாதம் இரண்டு முறை மாதிரித் தோ்வுகளும் நடத்தப்படும்.
இலவசப் பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புவோா் தங்களது பெயரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 0421-299152, 94990-55944 என்ற எண்களையோ தொடா்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.