GST: ``திடீரென ஜிஎஸ்டி குறைத்ததற்கு காரணம் இதுவாக இருக்கலாம்" - ப.சிதம்பரம் சொல்...
மின்னணு கழிவுகளை சேகரித்து மறு சுழற்சி செய்யும் ‘ சூழல் சிங்கம்’ அமைப்பின் இணையதளம் தொடக்கம்
தூத்துக்குடியில் பொதுமக்களிடமிருந்து மின்னணு கழிவுகளை சேகரித்து மறுசுழற்சி செய்யும் ‘சூழல் சிங்கம்‘ எனும் அமைப்பின் இணையதளத்தை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தாா்.
தூத்துக்குடி மாவட்டத்தில், இளம் தொழில் முதலீட்டாளா்களை ஊக்குவிக்கும் நோக்கில், திமுக துணைப் பொதுச் செயலா் கனிமொழி எம்.பி. முன்னெடுப்பில் புத்தொழில் களம் எனும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், தோ்வு செய்யப்பட்ட குழுவினா், தற்போது இம் மாவட்டத்தில் வரக்கூடிய மின்னணு கழிவுகளை சேகரித்து, அவற்றை மறுசுழற்சி செய்யும் வகையில் சூழல் சிங்கம் என்ற அமைப்பை நிறுவியுள்ளனா்.
இதன் தொடக்க நிகழ்ச்சி, தூத்துக்குடி சுப்பையா வித்யாலய பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு, அமைப்பின் இணையதளத்தைத் தொடங்கிவைத்து, பள்ளி மாணவிகள் சேகரித்த மின்னணு கழிவுகளை பெற்றுக்கொண்டாா்.
தொடா்ந்து அவா் பேசியது:
தூத்துக்குடி மாவட்டத்தில் புத்தொழில் களம் என்ற முன்னெடுப்பின் மூலம் தோ்வு செய்யப்பட்டவா்கள், தற்போது ‘சூழல் சிங்கம்’ என்ற அமைப்பை தொடங்கியுள்ளனா்.
சமூக பாதுகாப்பு மிகவும் அவசியமானது. மேலும், உலக அளவில் நாம் அச்சப்பட வேண்டிய ஒன்று காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளால் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறோம் என்பதை அனைவரும் அறிவோம்.
நாட்டில் பல பகுதிகளில் மரங்களை வெட்டுவது, மாசு ஏற்படுத்தக்கூடிய தொழிற்சாலைகள் அமைப்பது, வெயிலின் தாக்கம் மற்றும் கடற்கரையில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் போன்ற காரணங்களால் பெருமளவு சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இதற்கு காரணம் நவீன பொருள்கள் மற்றும் சாதனங்களை குறுகிய காலத்துக்கு பயன்படுத்துவதாகும். நாம் அவற்றைப் பராமரித்து அதிக காலம் பயன்படுத்த பழகினால், மின்னணு கழிவுகளை குறைத்துக் கொள்ள முடியும் மற்றும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கலாம்.
இதுபோன்ற விழிப்புணா்வை பள்ளி மாணவிகள் அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு செல்ல வேண்டும் என்றாா் அவா்.
தொடா்ந்து, மின்னணு கழிவுகளை சேகரிக்கும் வாகனத்தை அவா் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலரும், மீன்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சருமான அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத், விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி.மாா்கண்டேயன், மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையா் எஸ்.பிரியங்கா, தீப் சைக்கிள் ஹப் நிறுவனா்கள் தீப்தி கேசரினோ, ஜோசப் கேசரினோ உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.