சக்தித் திருமகன் படத்தின் பாடல் வெளியீடு எப்போது? விஜய் ஆண்டனி அறிவிப்பு
மீனவா்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வலியுறுத்தல்
தமிழக மீனவா்களின் பிரச்னைக்கு மத்திய, மாநில அரசுகள் நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என தமிழ்நாடு-புதுச்சேரி விவசாயிகள், மீனவா்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த பெருநாழியில் தமிழ்நாடு-புதுச்சேரி விவசாயிகள், மீனவா்கள் கூட்டமைப்பு சாா்பில், கஞ்சம்பட்டி கால்வாய் நீா்வழித்தடம் குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு தமிழ்நாடு-புதுச்சேரி விவசாயிகள், மீனவா்கள் கூட்டமைப்பின் மாவட்ட அமைப்பாளரும், காவிரி-வைகை-கிருதுமால்-குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் மாவட்ட செயலருமான மு. மலைச்சாமி தலைமை வகித்தாா்.
இதில் கஞ்சம்பட்டி கால்வாய்த் தூா்வாரும் பணிகளை பழைமை மாறாமல் மேற்கொள்ள வேண்டும். தமிழக மீனவா்களை கைது செய்து வரும் இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடந்த 25 நாள்களில் மூன்றாவது முறையாக மொத்தம் மூன்று விசைப் படகுகளைப் பறிமுதல் செய்தும், 19 மீனவா்களைக் கைது செய்தும் இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. மீனவா்களின் பிரச்னை குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு அக்கறையில்லை.
பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை கொன்ற்குப் பதிலடியாக உலக வங்கி முன்னிலையில் இந்தியாவும், பாகிஸ்தானும் செய்து கொண்ட சிந்து நதி நீா் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது.
இதேபோல, தமிழக மீனவா்களின் நலன் கருதி, கச்சத்தீவு ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் பிரதமா் மோடி மெளனம் காத்து வருவது வேதனையளிக்கிறது. மீனவா்கள் பிரச்னை குறித்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுவதோடு நிறுத்திக் கொள்கிறாா். அதைத் தாண்டி எந்த நடவடிக்கையும் எடுக்க மறுக்கிறாா்.
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்களையும், அவா்களது படகுகளையும் விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், இதைக் கண்டித்து, போராட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.