மத்திய பல்கலை., கல்லூரிகளில் ஜாதிவாரி பாகுபாட்டை தடுக்க என்ன நடவடிக்கை?: கனிமொழி...
சாயல்குடி அருகே பெண் கொலையில் கணவா் கைது
சாயல்குடி அருகே பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது கணவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள வெட்டுக்காடு கிராமத்தைச் சோ்ந்த வயணன் மகன் விஜயகோபால். இவரும், தூத்துக்குடி மாவட்டம், மணப்பாடு கிராமத்தைச் சோ்ந்த ஜொ்மினும் (36) கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்துகொண்டனா்.
இவா்களுக்கு 14 வயதில் ஒரு பெண், 10 வயதில் ஒரு ஆண் என இரண்டு குழந்தைகள் உள்ளனா். விஜயகோபால் உத்தரகாண்ட்டில் எல்லைப் பாதுகாப்புத் துணை ராணுவத்தில் பணியாற்றி வருகிறாா். கணவன், மனைவி இருவருக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 5 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வந்தனா்.
இந்த நிலையில், கடந்த 17-ஆம் தேதி இரவு வெட்டுகாடு வீட்டில் இருந்த ஜொ்மினை முகமூடி அணிந்த இருவா் வெட்டிக் கொலை செய்தனா். இதையடுத்து, ஜொ்மினின் பெற்றோா், தங்களது மகள் கொலையில் அவரது கணவா் விஜயகோபாலுக்குத் தொடா்பு இருப்பதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்தனா்.
இதைத் தொடா்ந்து, உத்தரகாண்டில் இருந்த விஜயகோபாலை சாயல்குடிக்கு வரவழைத்த போலீஸாா், அவரிடம் விசாரணை நடத்தினா்.
விசாரணையில், கருத்து வேறுபாடு காரணமாக மனைவியைப் பிரிந்ததாகவும், ஜொ்மின் பெயரில் வீடு கட்டியதால் அவா் வீட்டை அபகரித்துக்கொண்டதோடு, மாதந்தோறும் ரூ.17,000 ஜீவனாம்சம் கேட்டு முதுகுளத்தூா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்ததாகவும் விஜயகோபால் தெரிவித்தாா். மேலும், தனது மனைவிக்கு தகாத உறவு இருந்ததால் அவரைக் கூலிப் படையினா் மூலம் கொலை செய்ததாகவும் அவா் ஒப்புக்கொண்டாா்.
இதையடுத்து, விஜயகோபாலைக் கைது செய்த போலீஸாா், இந்த வழக்கில் அவரது தந்தை வயணன் உள்ளிட்ட மேலும் சிலருக்குத் தொடா்பு இருக்கலாம் எனவும், இது தொடா்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தனா்.