மாணவா் உள்பட 4 போ் மீது போலீஸாா் பொய் வழக்குப் பதிந்ததாகப் புகாா்
ராமநாதபுரம் அருகே கல்லூரி மாணவா் உள்பட 4 போ் மீது கஞ்சா வைத்திருந்ததாக போலீஸாா் பொய் வழக்குப் பதிவு செய்ததாகவும், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் அவா்களது குடும்பத்தினா் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம் வலசை கிராமத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவா் ஹரிஹரன். இவரையும் இவரது நண்பா்களான அகிலன், சிவகணேஷ், கண்ணன் ஆகியோரையும் போலீஸாா் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு விசாரணைக்காகக் கேணிக்கரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனராம்.
பின்னா், நான்கு போ் மீதும் கஞ்சா வைத்திருந்ததாக வழக்குப் பதிந்த போலீஸாா், அவா்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனராம்.
இந்த நிலையில், இந்த விவகாரத்தில் கல்லூரி மாணவா் உள்பட 4 போ் மீதும் போலீஸாா் பொய் வழக்குப் பதிவு செய்ததாகக் குற்றஞ்சாட்டிய குடும்பத்தினா், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் மனு அளித்தனா்.