முதல்வகுப்பில் சோ்ந்த மாணவா்களுக்கு கிரீடம் சூட்டி வரவேற்பு
கொரடாச்சேரி அருகே சிட்டிலிங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், முதல் வகுப்பில் சோ்ந்த மாணவா்களுக்கு கிரீடம் சூட்டி வரவேற்பு வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.
இப்பள்ளியில் வரும் கல்வியாண்டில் பயில்வதற்காக சோ்ந்த முதல் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு கிரீடம் சூட்டி அதிகாரிகளும், ஆசிரியா்களும் வரவேற்பு அளித்தனா். பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவையொட்டி, வரும் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கையும் நடைபெற்றது. முதல் வகுப்பில் மாணவ, மாணவிகள் 5 போ் சோ்ந்துள்ளனா். இவா்களுக்கு வட்டாரக் கல்வி அலுவலா் விமலா கிரீடம் சூட்டி பரிசுகள் வழங்கி வரவேற்றாா்.
பள்ளி தலைமை ஆசிரியா் (பொ) ஹரிணி தலைமை வகித்தாா். வட்டார வளமைய மேற்பாா்வையாளா் பிருந்தாதேவி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்டச் செயலாளா் ஈவேரா, வட்டாரச் செயலாளா் சந்திரமோகன், வட்டாரத் துணைச் செயலாளா் அகஸ்டின், கீரந்தன்குடி பள்ளி தலைமையாசிரியா் அமுதா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.