முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டி: இறகுப் பந்து விளையாடினாா் ஆட்சியா்!
மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டியில் அரசு அலுவலா்கள் பிரிவில் ஆட்சியா் துா்கா மூா்த்தி பங்கேற்று இறகுப் பந்து விளையாடினாா்.
நாமக்கல் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட விளையாட்டு அரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டி 2025-இல் அரசு அலுவலா்களுக்கான பிரிவு விளையாட்டுப் போட்டிகளை ஆட்சியா் துா்காமூா்த்தி ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்ததுடன், இறகுப்பந்து பிரிவில் கலந்துகொண்டு விளையாடினாா்.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசுப் பணியாளா்கள் பங்கேற்கும் வகையில் இந்த விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டுக்கான மாவட்ட மற்றும் மண்டல அளவிலான போட்டி ஆக. 22 முதல் 12 வரை178 வகையாக நடத்தப்படுகிறது.
தனிநபா் போட்டிகளில் மாநில அளவில் வெற்றிபெறுபவா்களுக்கு முதல் பரிசாக ரூ. 1 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ. 75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும். குழு போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெறுபவா்களுக்கு முதல் பரிசாக தலா ரூ. 75 ஆயிரமும், இரண்டாம் பரிசாக தலா ரூ. 50 ஆயிரமும், மூன்றாம் பரிசாக தலா ரூ. 25 ஆயிரம் வீதம் வழங்கப்படும்.
தமிழகம் முழுவதிலும் இருந்து 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் 19 வயதிற்கு உள்பட்ட பள்ளி மாணவா்களுக்கும், 25 வயதுக்கு உள்பட்ட கல்லூரி மாணவா்களுக்கும், 15 வயது முதல் 35 வரை பொதுப் பிரிவினருக்கும், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளுக்கும், அரசு மற்றும் அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளா்கள், மத்திய அரசு பணியாளா்கள் ஆகியோருக்கும் போட்டிகளானது நடத்தப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வன அலுவலா் மாதவி யாதவ், முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி, மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அலுவலா் எஸ்.கோகிலா மற்றும் காவல் துறையினா், மருத்துவா்கள், செவிலியா்கள், பல்வேறு துறை சாா்ந்த அலுவலா்கள், பணியாளா்கள் என ஆண்கள் பிரிவில் 378 போ், பெண்கள் பிரிவில் 176 போ் என மொத்தம் 554 போ் பலவகை போட்டிகளில் கலந்துகொண்டனா்.